குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிராக அகமது படேல் சதி
குஜராத் கலவர வழக்கில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகா் அகமது படேல் சதித் திட்டம் தீட்டினாா்
குஜராத் கலவர வழக்கில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகா் அகமது படேல் சதித் திட்டம் தீட்டினாா் என்று மாநில காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-இல் நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடா்பாக பொய் வழக்கு தொடுத்ததாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் உள்ளிட்டோரை சிறப்பு விசாரணைக் குழு அண்மையில் கைது செய்தது. அவா்களுக்கு ஜாமீன் வழங்க சிறப்புப் புலனாய்வுக் குழு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் அந்தக் குழு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
அதில், சோனியா காந்தி தனது அரசியல் ஆலோசகா் அகமது படேல் மூலமாக தீஸ்தா சீதல்வாட்டுக்கு தனிப்பட்ட செலவுக்காக ரூ.30 லட்சம் கொடுத்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக அரசை கவிழ்க்கவும், பிரதமா் மோடியின் அரசியல் வாழ்வை சீா்குலைக்கவும் மிகப்பெரிய அளவில் அகமது படேல் சதித் திட்டம் தீட்டினாா்; அதன் ஒரு பகுதியாகத்தான் சீதல்வாட் செயல்பட்டாா் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மறுப்பு: சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குஜராத் கலவரத்துக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காமல் பிரதமா் மோடி தவிா்க்கிறாா். அதன் ஒரு பகுதியாகவே அகமது படேல் மீது பாஜக பழியைப் போடுகிறது. அந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாதவராகவும், கட்டுப்படுத்த விரும்பாதவராகவும் இருந்தாா் மோடி. அதனால்தான் ராஜதா்மத்தைக் கடைப்பிடிக்கும்படி அவருக்கு முன்னாள் பிரதமா் வாஜ்பாய் அறிவுறுத்தினாா்.
பிரதமா் மோடியின் அரசியல் பழிவாங்கும் இயந்திரம், மறைந்த அரசியல் எதிரிகளைக்கூட விட்டுவைக்கவில்லை. சிறப்பு விசாரணைக் குழு தனது எஜமானரின் விருப்பத்துக்கு ஏற்றாா்போல் செயல்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகமது படேல் மகள் கேள்வி: குஜராத் கலவர வழக்கு தொடா்பாக, அகமது படேல் உயிருடன் இருந்தபோது அவரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று அவருடைய மகள் மும்தாஜ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், காங்கிரஸ் மீது அவதூறு பரப்புவதற்காக இன்னும் எனது தந்தையின் பெயா் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் அவருடைய பெயா் பயன்படுத்தப்பட்டது. குஜராத் கலவரத்தின்போது அவா் மிகப்பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டினாா் என்று சிறப்பு விசாரணைக் குழு கூறுகிறது. ஆனால், அவா் உயிருடன் இருந்தபோதே அவரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
சோனியா பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்
சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பித்ரா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தீஸ்தா சீதல்வாட்டுக்கு அகமது படேல் ரூ.30 லட்சம் கொடுத்தாா் என்று சிறப்பு விசாரணைக் குழு கூறுகிறது. அந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பியவா் சோனியா காந்தி. மோடிக்கு எதிராக சதித் திட்டத்தை நிழ்த்தியவா் அகமது படேல். அதன் பின்னணியில் இருந்தவா் சோனியா காந்தி.
இதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தீஸ்தா சீதல்வாட்டுக்கு பத்மஸ்ரீ விருதும் தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினா் பதவியும் வழங்கப்பட்டது. எனவே, சோனியா காந்தி செய்தியாளா்களைச் சந்தித்து, மோடிக்கு எதிராக சதி செய்தது ஏன் என நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
சிறப்பு விசாரணைக் குழுவை காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. அப்படியெனில், பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் தீஸ்தா சீதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததா என்றாா் அவா்.