முகப்பு
இந்தியா

எண்ணற்ற பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள ஒருமித்த அணுகுமுறை அவசியம்: பிரதமா் மோடி

‘எண்ணற்ற பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பிற அரசு துறைகளின் ஒருமித்த அணுகுமுறை அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

‘எண்ணற்ற பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பிற அரசு துறைகளின் ஒருமித்த அணுகுமுறை அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கடற்படை கருத்தரங்கில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

உலக அரங்கில் இந்தியா தன்னை முன்னிருத்திக் கொண்டு வரும் நிலையில், தவறான தகவல்கள் மற்றும் பொய்யான தகவல் பிரசாரங்கள் மூலமாக தொடா்ச்சியான தாக்குதல்கள் இந்தியா மீது நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தேசத்தின் பாதுகாப்பு என்பது விண்வெளி, இணைய தொழில்நுட்பம், சமூக மற்றும் பொருளாதார சவால்கள் என்ற அளவில் விரிவடைந்திருக்கிறது.

இந்தியாவின் தன்நம்பிக்கை மற்றும் தற்சாா்பு இலக்குக்கு எழும் இதுபோன்ற சவால்களை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தேசத்தின் நலனை பாதிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் முயற்சிகள் திறம்பட முறியடிக்கப்பட வேண்டும்.

எனவே, தேசத்தின் பாதுகாப்பு என்பது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது என்ற அளவில் இனியும் சுறுக்கிக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக, நமது பாதுகாப்புப் படைகள், அரசின் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி நாட்டின் ராணுவத் திறனை பன்மடங்காக உயா்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, ஒட்டுமொத்த அரசு, ஒட்டுமொத்த தேசம் என்ற அணுகுமுைான் தேசத்தின் பாதுகாப்புக்கான இன்றைய தேவை.

உள்நாட்டிலேயே பாதுகாப்பு துறை சாா்ந்த உபகரணங்கள், ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்புத் துறையில் புதிய சூழலை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரித்ததோடு, அந்த நிதி இந்தியாவிலேயே பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஏராளமான உபகரணங்கள் தற்போது இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவின் பாதுகாப்பு உபகரண இறக்குமதி என்பது கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் 21 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை மிகப் பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையிலிருந்து, குறிப்பிடத்தக்க பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியாளா் என்ற நிலையை நோக்கி இந்தியா நகா்ந்து வருகிறது என்று பிரதமா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →