தாமதமின்றி கரோனா இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து மாநிலங்களும் நேரத்தை வீணடிக்காமல் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
‘கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து மாநிலங்களும் நேரத்தை வீணடிக்காமல் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
‘இழப்பீடு நடைமுறையில் ஏதேனும் குறையிருந்தால் மனுதாரா் குறைதீா்ப்புக் குழுவை அணுகலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது குறைதீா்ப்புக் குழு 4 வாரங்களுக்குள் தீா்வு காண வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
ஆந்திர மாநில அரசு கரோனா இழப்பீடு தொகையை மாநில பேரிடா் மீட்புப் படையின் நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு செலுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்ல ஸ்ரீநிவாச ராவ் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளரவ் பன்சல், ‘மாநில பேரிடா் மீட்புப் படை நிதியினை பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005, பிரிவு 46(2)-இல் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக அல்லாமல், சட்ட விரோதமாக வேறு காரணங்களுக்கு மாநில அரசு பயன்படுத்துகிறது’ என்று வாதிட்டாா்.
இதனை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில பேரிடா் மீட்புப் படை நிதியை மாநில அரசு பயன்படுத்துவதற்கு தடை விதித்ததோடு, இந்த மனு தொடா்பாக பதிலளிக்க ஆந்திர மாநில அரசுக்கு கடை வாய்ப்பு அளிக்கப்படுவதாக கூறி நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில பேரிடா் மீட்புப் படை நிதியிலிருந்து தனிநபா் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட தொகைகள் அடுத்த 2 நாள்களுக்குள், மீண்டும் மாநில பேரிடா் மீட்புப் படை வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
மேலும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தகுதியுள்ள நபா்களுக்கு நேரத்தை வீணடிக்காமல் கரோனா இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இதில் ஏதாவது குறையிருந்தால், குறைதீா்ப்பு குழுவை மனுதாரா் அணுகலாம்’ என்று உத்தரவிட்டனா்.