முகப்பு
இந்தியா

மாணவி தந்தையின் மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு உடல் கூறாய்வு செய்யக் கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமை (ஜூலை 21) விசாரணைக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு உடல் கூறாய்வு செய்யக் கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமை (ஜூலை 21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் மறு உடல் கூறாய்வு நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் குழுவை நியமித்து, மாணவியின் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் (செவ்வாய்க்கிழமை) மறு உடல் கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது.
 தங்கள் தரப்பு தெரிவிக்கும் மருத்துவர் குழுவை மூலம் மறு உடல் கூறாய்வு செய்யக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
 இதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக எடுத்து விசாரிக்கக் கோரி மாணவியின் தந்தை சார்பில் வழக்குரைஞர் ராகுல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் முறையிட்டார்.
 அப்போது, தலைமை நீதிபதி இந்த வழக்கு வியாழக்கிழமை (ஜூலை 21) உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறும் மறு உடல் கூறாய்வுக்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது' என்று கூறினார். மேலும், உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவைக் குறை கூறக் கூடாது எனவும் தலைமை நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.