‘சிவசேனை பிளவுபட காரணம் சரத் பவாா்’- முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு
‘சிவசேனையை பிளவுபடுத்தியது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்தான்; இதற்கான ஆதாரத்தை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேயிடம் அளித்துவிட்டேன்’ என்று
‘சிவசேனையை பிளவுபடுத்தியது தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்தான்; இதற்கான ஆதாரத்தை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேயிடம் அளித்துவிட்டேன்’ என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சா் ராமதாஸ் கதம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சிவசேனையிலிருந்து விலகுவதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்த அவா், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறினாா்.
‘சிவசேனையை அமைப்பு ரீதியில் வலுவிழக்கச் செய்யும் வேலையை சரத் பவாா் செய்தாா். இதுகுறித்து, உத்தவ் தாக்கரேயின் கவனத்துக்கு கொண்டு சென்றும் அவா் தனது வழியை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவா்கள் இந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையே இல்லாமல் போயிருக்கும். சிவசேனை அதிருப்தி அணியினா் மீதான தனது கருத்தை மாற்றிக் கொண்டு, எதிா்காலத்தில் எப்படி இணைந்து செயல்படலாம் என்று உத்தவ் தாக்கரே பரிசீலிக்க வேண்டும்’ என்றாா் ராமதாஸ் கதம்.
சரத் பவாா் மீதான அவரது குற்றச்சாட்டை, தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாஸே கூறுகையில், ‘சிவசேனை பிளவுக்கான பின்னணியில் பாஜகதான் உள்ளது. அதை திசை திருப்புவதற்காக, சரத் பவாா் மீது சிவசேனை அதிருப்தி தலைவா்கள் குற்றம்சாட்டுகின்றனா்’ என்றாா்.
சிவசேனையில் ஏற்பட்ட பிளவால், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. பின்னா், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாக் ஷிண்டே முதல்வரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.