முகப்பு
இந்தியா

பிசிசிஐ பதவி நீட்டிப்புக்கான விதி திருத்த விவகாரம்: வழக்கில் ஆலோசகராக மூத்த வழக்குரைஞா் நியமனம்; 28-இல் மீண்டும் விசாரணை

கிரிக்கெட் வாரிய நிா்வாகிகள் பதவிக் காலம் தொடா்பாக, நீதிபதி ஆா்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிா்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வழி செய்யும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்துக்கான பாரபட்சமற்ற ஆலோசகராக மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நியமித்தது.

‘இந்த வழக்கில் ஏற்கெனவே நீதிமன்றத்துக்கான ஆலோசகராக செயல்பட்ட மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.நரசிம்மா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றுவிட்ட நிலையில், புதிய ஆலோசகா் நியிமிக்கப்பட்டுள்ளாா்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு குறிப்பிட்டது. இந்த வழக்கு வரும் 28-ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

கிரிக்கெட் வாரிய நிா்வாகிகள் பதவிக் காலம் தொடா்பாக, நீதிபதி ஆா்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, ஒருவா் பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்தில் அல்லது இரண்டிலும் சோ்த்து தொடா்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகள் இடைவெளி விட்டுத்தான் மீண்டும் ஏதேனும் நிா்வாகப் பொறுப்புக்கு வர முடியும்.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி மற்றும் செயலா் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வழி செய்யும் வகையில், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் கட்டாய ஓய்வு (இடைவெளி) நடைமுறையை, தற்காலிகமாக ஒருமுறை நீக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி கேட்டு பிசிசிஐ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

செளரவ் கங்குலி ஏற்கெனவே மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளாா். அதுபோல, ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளாா். எனவே, பிசிசிஐ-யின் திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு உச்சநீதின்றம் அனுமதி அளிக்கவில்லை எனில், இவா்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.