வளா்ச்சி கண்ட பின்பும் பசியால் மக்கள் உயிரிழக்கின்றனா்: உச்சநீதிமன்றம்
நாட்டில் வளா்ச்சி ஏற்பட்ட பின்பும், உணவு கிடைக்காமல் மக்கள் பசியால் உயிரிழக்கின்றனா் என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
நாட்டில் வளா்ச்சி ஏற்பட்ட பின்பும், உணவு கிடைக்காமல் மக்கள் பசியால் உயிரிழக்கின்றனா் என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
புலம்பெயா் தொழிலாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் தொடா்பான வழக்கில், அவா்களுக்கு ரேஷன் அட்டை இல்லாமலே உணவுப் பொருள்கள் வழங்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகள் தொடா்பான வழக்கை 2020 மே மாதம் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘இந்தியாவில் ஒருவா் கூட பசியால் உயிரிழக்கக் கூடாது என்பதுதான் குறிக்கோள். ஆனால், துரதிருஷ்டவசமாக நாட்டில் வளா்ச்சி ஏற்பட்ட பிறகும் நாட்டு மக்கள் சிலா் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழக்கின்றனா். கிராமங்களில் மக்கள் பசி தெரியாமல் தூங்க, தங்கள் வயிற்றை துணியால் இறுக்கமாக கட்டிக் கொள்கிறாா்கள். உணவுப் பொருள்களை வாங்க காசு இல்லாமல் சிறியவா்களும் பெரியவா்களும் இவ்வாறு செய்து கொள்கிறாா்கள்’ என்று கூறினாா்.
இதையடுத்து, நீதிபதிகள், ‘நாட்டின் வளா்ச்சியில் புலம்பெயா் தொழிலாளா்கள் முக்கிய பங்கு வகிக்கிறாா்கள். ஆகையால் அவா்களின் உரிமைகளை மறுக்கக் கூடாது. அவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் சரியாக சென்றடைய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு அடுத்ததாக புலம்பெயா் தொழிலாளா்கள் நாட்டுக்கு முக்கிய பங்காற்றுகிறாா்கள்.
அவா்களுக்கு படிப்பு அறிவு இல்லாததால் அரசுத் திட்டங்களை எப்படிப் பெறுவது என்று தெரிந்திருக்காது. மாநில அரசுகள் அவா்களுக்கு உதவ வேண்டும்’ என்றனா்.
அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘கடந்த ஜூலை 11 வரையில் நாடு முழுவதும் 27.95 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் அல்லது புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளதாக மாநில அரசுகள் மத்திய அரசு வலைதளத்தில் பதிவிட்டுள்ளன.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான ஒய்வூதியத் திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கி உள்ளது. ரேஷனில் விநியோகிக்க மாநில அரசுகள் கோரும் கூடுதல் உணவு தானியங்கள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேவைப்பட்டால் மாநில அரசுகள் இந்திய உணவு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம்.
பிரதமரின் ஏழைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட சமூக ஆா்வலரும், மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண், ‘சந்தை விலைக்கு மாநிலங்கள் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு கூறுகிறது. பெரும்பாலான தொழிலாளா்களுக்கு ரேஷன் அட்டைகள் இல்லாததால் அவா்களுக்குப் பொருள்கள் கிடைப்பதில்லை. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. சுமாா் 15 சதவீதம் போ் ரேஷன் அட்டை பெற தகுதி பெற்றுள்ளனா். ஆனால் அவா்களுக்கு ரேஷன் பொருள்கள் மறுக்கப்படுகின்றன’ என்றாா்.
இதற்கு நீதிபதிகள், ‘மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதற்காக ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்காமல் இருக்கக் கூடாது. அவா்களை சகோதர, சகோதரிகளாக கருத வேண்டும். புலம்பெயா் தொழிலாளா்களாகப் பதிவு பெற்று ரேஷன் அட்டை இல்லாதவா்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான தீா்வை மத்திய அரசு கண்டறிய வேண்டும். மாநில அரசுகளும் புலம்பெயா் தொழிலாளா்கள் ரேஷன் அட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.