மகள்கள் என்றாலே கடன்சுமை அல்ல: உச்ச நீதிமன்றம்
மகள்கள் என்றாலே அவர்கள் கடன்சுமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
புது தில்லி: மகள்கள் என்றாலே அவர்கள் கடன்சுமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணுக்கு, அவரது தந்தை அளிக்க வேண்டிய பராமரிப்புச் செலவு குறித்த வழக்கில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமர்வு முன்பு, மகளின் பராமரிப்பு செலவுக்கு தந்தை அளிக்க வேண்டிய தொகை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெண்கள் என்றாலே கடன் சுமை என்று தந்தை கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மகள்கள் என்றால் கடன்சுமைகள் அல்ல என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14வது பிரிவின் படி, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை சுட்டிக்காட்டினர்.
Advertisement
Advertisement
விவாகரத்துக்குப் பின் மகளுக்கு மாதந்தோறும் ரூ.8,000மும், மனைவிக்கு ரூ.400ம் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அந்த நபர் நிறைவேற்றவில்லை என்று நீதிமன்றத்தில் 2020ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இதில், இரண்டு வாரத்தில் மனைவி மற்றும் மகளுக்கு ரூ.2.50 லட்சம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிறகு இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த போது, மனைவி இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படிப்பில் கவனம் செலுத்துமாறு மகளுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள், அப்போதுதான் அப்பாவை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறினர். பல ஆண்டுகளாக அப்பாவும் மகளும் பேசிக் கொள்வதில்லை என்று கூறப்பட்டது. இதற்கு இருவரும் பேசுமாறு நீதிபதிகள் கூறினர்.
ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் மகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குமாறு தந்தைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.