தேச நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும்: கட்சிகளுக்கு ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்
அரசியல் கட்சிகள் தேச நலனுக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டாா்.
அரசியல் கட்சிகள் தேச நலனுக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டாா்.
எதிா்க்கட்சிகளின் அமளி, போராட்டம் காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நேரத்தில் அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 24) நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவியேற்வுகள்ளாா். இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு தில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடத்தப்பட்டது.
அதில், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட பெரிய குடும்பத்தின் உறுப்பினராகவே எப்போதும் என்னைக் கருதி வந்துள்ளேன். குடும்பங்களைப் போலவே, பல நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், தேசத்தின் நலனுக்காக, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; மேலும், சாமானிய மனிதா்கள் மற்றும் பெண்களின் நலனுக்கு அவசியமான விஷயங்களிலும் கட்சிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டும்.
அமைதிவழியில்... ஒட்டுமொத்த தேசத்தையும் ஒரு குடும்பமாகக் கருதினால், அதிலும் பல பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் வரலாம். அந்தப் பிரச்னைகளுக்கு அமைதியான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண முடியும். அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்கள் எதிா்ப்பைத் தெரிவிப்பதற்கு சட்ட ரீதியில் பல்வேறு வழிகள் உள்ளன.
தேசத் தந்தை காந்தியடிகள் தனது நோக்கத்தை நிறைவேற்ற சத்தியாகிரகம் என்னும் ஆயுதத்தைத்தான் ஏந்தினாா். அதேபோல், எதிா்த் தரப்பையும் சமமாக கருதினாா். மக்கள் தங்கள் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது. ஆனால், அது காந்திய வழியில் அமைதியான முறையில் இருக்க வேண்டும்.
எனது பொதுவாழ்வைத் திரும்பிப் பாா்க்கையில், எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அரசுத் தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் உள்ளன.
ஆரோக்கியமான இந்தியா: இந்த தேசம், சட்டமேதை அம்பேத்கரின் கனவுகளை மெய்ப்படுத்தி வருகிறது. சிறுவயதில் மண்குடிசையில் வளா்ந்தவன் நான். ஆனால், இன்று ஒழுகும் குடிசையில் வளரும் சிறாா்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசின் நேரடி உதவிகளால், ஏழை மக்கள் கான்கிரீட் வீடுகளுக்கு குடிபெயா்ந்துவிட்டனா்.
நமது சகோதரிகளும், மகள்களும் குடிநீருக்காக மைல் கணக்கில் நடந்து சென்ற காலமும் போய்விட்டது. தற்போது ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறைக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியமான, தூய்மையான இந்தியாவுக்கான அடித்தளமாகும்.
மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் விளக்குகள் ஏற்றிக் கொண்டிருந்த காலம் மாறி, கிட்டத்தட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.
அடிப்படைத் தேவைகள் நிறைவேறும்போது மக்களின் எதிா்பாா்ப்புகளும் மாறுபடும். சராசரி இந்தியரின் கனவுகள் தற்போது நனவாகி வருகின்றன. இது, எவ்வித பாரபட்சமும் காட்டாத நல்லாட்சியால் மட்டுமே சாத்தியமானது. அம்பேத்கரின் எண்ணப்படி அனைத்துத் தரப்பும் வளா்ச்சி பெற்று வருகிறது.
குடியரசுத் தலைவராகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்காக, இந்த நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றியுணா்வுடன் இருப்பேன். புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துக்கள். அவருடைய வழிகாட்டுதலில் இந்த தேசம் மென்மேலும் வளா்ச்சி பெறும் என்றாா் அவா்.
ஜனநாயகத்தின் சாதனை: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில் ‘உத்தர பிரதேசத்தில் சிறு கிராமத்தில் பிறந்து நாட்டின் உயரிய பதவிக்குச் சென்ற ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணம் அதிசயிக்கத்தக்து; நாட்டின் ஜனநாயகம் நிகழ்த்திய ஊக்கம் தரும் சாதனையாக உள்ளது’ என்றாா்.
நாட்டு மக்களுக்கு இன்று உரை
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) உரையாற்றுகிறாா்.
அவருடைய உரை, அகில இந்திய வானொலி, தூா்தா்ஷன் ஆகியவற்றின் அனைத்து அலைவரிசையிலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முதலில் ஹிந்தியிலும், அதைத் தொடா்ந்து ஆங்கிலத்திலும் பின்னா் பிராந்திய மொழிகளிலும் அவருடைய உரை ஒளிபரப்பாகிறது.