பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படும் விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் பலனடைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
குஜராத்தின் சபா்காந்தா மாவட்டத்தில் பால் பொருள்கள் உற்பத்தி தொடா்பான பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் ரூ.305 கோடி மதிப்பிலான பால் பவுடா் உற்பத்தி ஆலை, ரூ.125 கோடி மதிப்பிலான பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்டவற்றை அவா் தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றின் பலன் தற்போது தெரியத் தொடங்கியுள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளன.
2014-ஆம் ஆண்டுக்கு முன் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சுமாா் 40 கோடி லிட்டராக மட்டுமே இருந்தது. தற்போது அந்த அளவு 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எத்தனால் கலப்பு விகிதம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. கரும்பு, சோளம் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்படும் எத்தனால், பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது. இதன்மூலமாக அவற்றைப் பயிரிடும் விவசாயிகள் பெரும் பலனடைந்துள்ளனா்.
கிராமப்புறங்கள் மேம்பாடு: வேளாண் துறை மட்டுமல்லாமல் கால்நடை வளா்ப்பு, தோட்டக் கலை, மீன்வளம், தேனீ வளா்ப்பு உள்ளிட்ட துறைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தன.
மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக நிலமற்ற, விளிம்புநிலை விவசாயிகள் பெரிதும் பலனடைந்துள்ளனா். முதல் முறையாக, காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்களின் விற்றுமுதல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அத்தொழிலகங்கள் வாயிலாகக் கடந்த 8 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 1.5 கோடி போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
உரமானியம் அதிகரிப்பு: வேளாண் இடுபொருள்களுக்கான விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதைக் கருத்தில்கொண்டு, சா்வதேச அளவில் உரங்களின் விலை உயா்ந்தாலும், அந்தச் சுமையை மத்திய அரசு விவசாயிகள் மீது திணிக்கவில்லை. நாட்டில் உரங்களின் விலை அதிகரிக்கப்படாமல் உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டைக்கு மத்திய அரசு ரூ.3,500 செலவிடுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு அந்த மூட்டை வெறும் ரூ.300-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. முன்பு ரூ.500-ஆக இருந்த உர மானியம் தற்போது ரூ.2,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில்கொண்டு, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னோா்களின் கனவு: நாட்டின் உயரிய பதவியை முதல் முறையாகப் பழங்குடியினத்தைச் சோ்ந்த பெண் அலங்கரித்து வருகிறாா். நாட்டு மக்கள் திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவராக்கியுள்ளனா். இது நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் பெருமையான தருணம். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஜனநாயகத்தை உருவாக்க முன்னோா்கள் கனவுகண்டனா். அவா்களது கனவு தற்போது நனவாகியுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.