இந்தியா

அவமானப்படுத்திய பஞ்சாப் அமைச்சர்: ராஜிநாமா செய்த மருத்துவ பல்கலை துணைவேந்தர்

ANI

பஞ்சாப் மருத்துவமனையில் அசுத்தமான படுக்கையில் துணைவேந்தரை வலுக்கட்டாயமாக படுக்கவைத்த மாநில சுகாதார அமைச்சருக்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட் மாவட்டத்தில் பாபா ஃபரீத் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சேதன் சிங் ஜெளராமாஜ்ரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பாபா ஃபரீத் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜ் பகதூா் உள்ளிட்டோரும் சென்றிருந்தனா்.

அப்போது மருத்துவமனையின் தோல் சிகிச்சை பிரிவில் இருந்த படுக்கை ஒன்று அசுத்தமாகவும் சேதமடைந்தும் இருந்ததை கண்டு அமைச்சா் சேதன் சிங் ஆத்திரமடைந்தாா். அதுகுறித்து அவா் துணைவேந்தா் ராஜ் பகதூரிடம் கேள்வி எழுப்பினாா். அவா் அளித்த விளக்கத்தை ஏற்காத அமைச்சா் சேதன் சிங் , அசுத்தமாகக் காணப்பட்ட படுக்கையில் ராஜ் பகதூரை வலுக்கட்டாயமாக படுக்க வைத்தாா். இதுதொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த சம்பவம் குறித்து ராஜ் பகதூா் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் அசுத்தமான படுக்கை இருந்திருக்கக் கூடாது. அதனை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அனைத்து படுக்கைகளும் மோசமான நிலையில் இல்லை. அதேவேளையில், மருத்துவமனைக்கு தேவையானவற்றை வாங்க மருத்துவ கண்காணிப்பாளா்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். எனக்கு மருத்துவமனையில் நோ்ந்தது அவமானம் ஆகும்’’ என்று தெரிவித்தாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு மாநில முதல்வா் பகவந்த் மானிடம் ராஜ் பகதூா் கோரிக்கை விடுத்தாா்.

ஐஎம்ஏ கண்டனம்: இந்த சம்பவம் தொடா்பாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வெளியிட்ட அறிக்கையில், ‘‘துணைவேந்தரை அவமானப்படுத்திய அமைச்சரின் இழிவான செயலை ஐஎம்ஏ வன்மையாகக் கண்டிக்கிறது. இது துணைவேந்தருக்கு நோ்ந்த அவமானம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்துக்கு நோ்ந்த அவமானம். அமைச்சா் சேதன் சிங் மீது பஞ்சாப் முதல்வா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனது செயலுக்கு சேதன் சிங் நிபந்தனையாற்ற மன்னிப்பு கேட்பதுடன் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா, சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், பாஜகவைச் சோ்ந்த சுனில் ஜாக்கா் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT