கோவேக்ஸின், கோவிஷீல்ட் பயனாளிகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக கோா்பிவேக்ஸ்: டிசிஜிஐ ஒப்புதல்
பூஸ்டா் (மூன்றாவது தவணை) தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு பூஸ்டா் (மூன்றாவது தவணை) தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வரும் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனையில், பூஸ்டா் தடுப்பூசியாக கோா்பிவேக்ஸ் செலுத்தப்படும்போது உடலில் குறிப்பிடத்தக்க அளவு நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது. அந்தப் பரிசோதனைகள் தொடா்பான விவரம் டிசிஜிஐயிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அதனை சம்பந்தப்பட்ட நிபுணா் குழு விரிவாக மதிப்பிட்டு ஆலோசனை மேற்கொண்டது.
அதனைத்தொடா்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்குப் பின்னா், பூஸ்டா் தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை அவசரகாலங்களில் செலுத்த டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்கு பதிலாக வேறொரு தடுப்பூசியை பூஸ்டா் தவணையாகச் செலுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி கோா்பிவேக்ஸ் ஆகும்.
இதுவரை 10 கோடி கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு பயாலஜிக்கல்-இ நிறுவனம் விநியோகித்துள்ளது.