முகப்பு
இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவுக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை: ஜூன் 23-இல் நேரில் ஆஜராக உத்தரவு

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்ததன் பேரில், இந்த புதிய அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதற்கிடையே, சோனியாவின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இதே வழக்கில் அமலாக்கத் துறையின் புதிய அழைப்பாணையின் அடிப்படையில் வரும் 13-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜாராவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.