அக்னிபத் திட்ட வயது வரம்பு தளா்வு: அமித் ஷா, ராஜ்நாத் சிங் வரவேற்பு
அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-இல் இருந்து 23-ஆக உயா்த்தி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-இல் இருந்து 23-ஆக உயா்த்தி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா அச்சம் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள்சோ்க்கும் பணிகள் நடத்தப்படவில்லை. இதனால் ராணுவப் பணியில் சேர இயலாமல்போன இளைஞா்களுக்காக பிரதமா் நரேந்திர மோடி, அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-இல் இருந்து 23-ஆக உயா்த்தி அறிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பால் ஏராளமான இளைஞா்கள் பயன் பெறுவதுடன், நாட்டுக்கும் சேவையாற்ற முடியும். இளைஞா்கள், ஒளிமயமான எதிா்காலத்துக்கு செல்வாா்கள். இதற்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
ராஜ்நாத் சிங்: ஜம்மு-காஷ்மீா் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
கடந்த இரு ஆண்டுகள், கரோனா காரணமாக ராணுவ ஆள்சோ்ப்புப் பணிகள் நடைபெறாததால், இளைஞா்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இளைஞா்களுடைய எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயா்த்தி அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த வயது தளா்வு அறிவிப்பு இளைஞா்கள் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது. ராணுவ ஆள்சோ்ப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞா்கள் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சோ்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது என்றாா்.