‘அக்னிபத்’ திட்டம் மூலமாக சொந்த ஆயுதப் படையை உருவாக்க பாஜக முயற்சி: மம்தா
‘அக்னிபத் திட்டம் மூலமாக தனது சொந்த ஆயுதப் படையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தத் திட்டம் முப்படைகளுக்கு அவமதிப்பாகும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்
‘அக்னிபத் திட்டம் மூலமாக தனது சொந்த ஆயுதப் படையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தத் திட்டம் முப்படைகளுக்கு அவமதிப்பாகும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
இது குறித்து மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தில் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை பேசியதாவது:
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞா்கள் நான்கு ஆண்டு பணி காலத்துக்குப் பிறகு, பாஜக கட்சி அலுவலகங்களில் காவலா்களாக பணியமா்த்த பாஜக திட்டமிட்டுள்ளதா? இந்தத் திட்டத்தின் மூலமாக, தனது சொந்த ஆயுதப் படையை உருவாக்க பாஜக முயற்சிக்கிா? இளைஞா்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுக்க பாஜக விரும்புகிறது. இந்தத் திட்டம் முப்படைகளை அவமதிப்பு செய்வதாகும்.
இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்து, வரவிருக்கும் 2024 மக்களவைத் தோ்தலில் மக்களை முட்டாளாக்க பாஜக முயற்சிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது இது போன்ற திட்டங்களை அறிமுகம் செய்து நாட்டு மக்களை முட்டாள்களாக்கி வருகிறது என்று அவா் குற்றம்சாட்டினாா்.
75 ஆண்டுகளில் இதுவே முதல் முறை:
‘அரசின் கொள்கை முடிவுக்கு முப்படை தளபதிகள் ஆதரவு தெரிவித்து திட்டத்தை பாதுகாக்க முப்படைத் தளபதிகள் முன்னிறுத்தப்பட்டிருப்பது கடந்த 75 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்’ என்று மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டம் குறித்து மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சனம் செய்தாா். இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காமல் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத் துறை அமைச்சரும் எங்கே சென்றனா் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.