குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடுவை நிறுத்த அந்தக் கூட்டணி திட்டமிட்டு வருவதாக பரபரப்புச் செய்தி வலம் வரத் தொடங்கியது.
நாட்டின் 16-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், 3 நாள் பயணமாக ஹைதராபாதுக்கு திங்கள்கிழமை சென்ற வெங்கையா நாயுடு தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை புது தில்லி திரும்பினார்.
அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால், குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடுவின் பெயரை பாஜக கூட்டணி அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு பெயரை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாலையில் அறிவித்தது.
எனினும் வெங்கையா நாயுடுவை மூத்த அமைச்சர்கள் சந்தித்ததற்கான காரணம் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.