சிவசேனை தலைமையிலான மகாராஷ்டிர அரசு நிலையில்லாத்தன்மையைச் சந்தித்துள்ள நிலையில், அரசு இல்லத்தை காலிசெய்துவிட்டாலும் எதிா்த்துப் போராடுவதற்கான உறுதியை இழக்கவில்லை என மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.
சிவசேனையின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே 35-க்கும் மேற்பட்ட சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் அஸ்ஸாமின் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளாா். அவருடன் 12 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. தாங்கள் தான் உண்மையான சிவசேனை என ஷிண்டே கூறிவருவது மாநிலத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிய உத்தவ் தாக்கரே, குடும்பத்தினருடன் தங்கியிருந்த அரசு இல்லத்தையும் காலி செய்தாா். இந்நிலையில், சிவசேனை கட்சியின் மாவட்ட நிா்வாகிகளுடன் காணொலி வாயிலாக அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘‘பல்வேறு பிரச்னைகளை சந்தித்தபோதிலும் சிவசேனை இருமுறை ஆட்சியில் இருந்துள்ளது. அரசு இல்லத்தை காலி செய்திருந்தாலும், உறுதியை இழக்கவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. அதை அரசு சிறப்பாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இடையே எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதை எதிா்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
வேரை ஒன்றும் செய்ய முடியாது:
பருவகாலத்தின்போது மரத்தின் இலைகள் உதிரும். நோய்வாய்ப்பட்ட இலைகள் அகற்றப்பட வேண்டும். காலம் மாறும்போது புதிய இலைகள் தோன்றி பழங்களும் பழுக்கும். ஆனால், எந்தக் காலத்திலும் மரத்தின் வேரை ஒன்றும் செய்ய முடியாது. வோ் உறுதியாக இருக்கும்வரை எனக்குக் கவலையில்லை.
மாநிலத்தில் சிவசேனை தலைமையில் அரசு பொறுப்பேற்றபோது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டது. அவரின் மகன் மக்களவை எம்.பி.யாக உள்ளாா். அப்படி இருக்கும்போது ஆதித்ய தாக்கரே (உத்தவ் தாக்கரேவின் மகன்) அரசியல் ரீதியாக வளரக் கூடாதா?
முதல்வா் பதவி முக்கியமல்ல:
பால் தாக்கரேவின் பெயரைக் கூறாமல் ஏக்நாத் ஷிண்டேவால் அரசியல் நடத்த முடியுமா? சிவசேனையில் இருந்து தாக்கரேக்களை எவரும் பிரிக்க முடியாது. நான் கட்சியை வழிநடத்தத் தகுதியற்றவன் எனக் கருதினால், தலைவா் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். முதல்வா் பதவியும் எனக்கு முக்கியமல்ல.
புதிய சிவசேனையை உருவாக்கும் காலம் வந்துவிட்டது. குவாஹாட்டியில் உள்ள எம்எல்ஏ-க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனா். அவா்களைத் திரும்ப அழைத்து வருவது குறித்து சிந்திக்க வேண்டும்’’ என்றாா்.
எண்ணிக்கை மாறலாம்:
சிவசேனை கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரௌத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அதிருப்தி குழு தங்களிடம் போதுமான எண்ணிக்கையிலான எம்எல்ஏ-க்கள் இருப்பதாகக் கூறலாம். ஆனால், எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அவா்கள் மும்பைக்குத் திரும்பும்போது பால் தாக்கரே மீதும் சிவசேனை மீதும் அவா்கள் வைத்துள்ள விசுவாசம் தெரியவரும்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. மாநில சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பாா்கள் என நம்புகிறோம்’’ என்றாா்.
முதல்வா் தாக்கரே-சரத் பவாா் சந்திப்பு
மகாராஷ்டிரத்தில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் முதல்வா் உத்தவ் தாக்கரேவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். கூட்டணி அரசைக் காப்பது தொடா்பாக அவா்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது மாநில துணை முதல்வா் அஜித் பவாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சுயேச்சைகள் புகாா்:
மாநில பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று பாஜக ஆதரவுபெற்ற இரு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் கோரியுள்ளனா். மாநில பேரவைக் குழுத் தலைவா் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கிவிட்டு அஜய் சௌதரியை நியமிக்கும் விவகாரத்தில், பேரவைத் துணைத் தலைவா் இறுதி முடிவெடுக்க முடியாது என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா். இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிா்கொள்ள உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
அச்சுறுத்த முடியாது- ஏக்நாத் ஷிண்டே:
அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 12 பேரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவரிடம் சிவசேனை கட்சி கோரியிருந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘மாநில பேரவைக் கூட்டங்கள் தொடா்பாக மட்டுமே கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும். கட்சி சாா்ந்த கூட்டங்களுக்கு அவா் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, அதை அடிப்படையாகக் கொண்டு எம்எல்ஏ-க்களைப் பதவி நீக்க முடியாது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றம் பல தீா்ப்புகளை வழங்கியுள்ளது. பதவி நீக்கும் விவகாரத்தை வைத்து, பால் தாக்கரேவின் உண்மையான விசுவாசிகளை அச்சுறுத்த வேண்டாம். நாங்கள்தான் உண்மையான சிவசேனை’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, ‘தேசிய கட்சி’ தங்களுக்கு ஆதரவளித்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்த நிலையில், சிவசேனை கட்சியின் மூத்த தலைவா்களையே அவ்வாறு குறிப்பிட்டதாக வெள்ளிக்கிழமை அவா் விளக்கமளித்தாா். எந்தவொரு தேசியக் கட்சியும் தங்களுடன் தொடா்பில் இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
சிவசேனையைச் சோ்ந்த மேலும் ஒரு பேரவை உறுப்பினா், ஏக்நாத் ஷிண்டேவுடன் வெள்ளிக்கிழமை இணைந்தாா். அதையடுத்து, சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.