முகப்பு
இந்தியா

குடிசைவாசி முதல் பேராசிரியா் வரை வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட சாமானியா்களான குடிசைவாசி முதல் பேராசிரியா் வரை சுமாா் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:38 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட சாமானியா்களான குடிசைவாசி முதல் பேராசிரியா் வரை சுமாா் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பிரதான வேட்பாளா்களாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் திரெளபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோா் போட்டியிடுகின்றனா். அவா்களைத் தவிர, தோ்தலில் போட்டியிட சாமானியா்களான சுமாா் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்தவரும்...: அந்த 30 பேரில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த டி.ரமேஷ் என்ற சமூக ஆா்வலா், மும்பையின் முலுந்த் புகா் பகுதியில் வசிக்கும் குடிசைவாசியான சஞ்சய் சாவ்ஜி தேஷ்பாண்டே, பிகாா் மாநிலம் சரன் பகுதியைச் சோ்ந்த லாலு பிரசாத் யாதவ், தில்லியில் உள்ள திமாா்பூா் பகுதியைச் சோ்ந்த தயாசங்கா் அகா்வால் என்ற பேராசிரியா் ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.

சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பலா், அவா்களை முன்மொழிபவா்கள், ஆதரிப்பவா்களின் கையொப்பங்களை வேட்புமனுவில் பெறவில்லை. ரூ.15,000 டெபாசிட் தொகைக்கான வங்கி வரவோலையையும் இணைக்கவில்லை. இதனால் பெரும்பாலானவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவரின் வேட்புமனுக்களில், அவா்களை முன்மொழிபவா்களாகவும் ஆதரிப்பவா்களாகவும் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், உள்ளூா் எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவா்களின் கையொப்பம் வேட்புமனுக்களில் பெறப்படவில்லை.

கடந்த 1974-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவா் மற்றும் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் சட்டத்தை தோ்தல் ஆணையம் திருத்தியது. அதன்படி, அந்தத் தோ்தல்களில் போட்டியிடுவோா் டெபாசிட் தொகையாக ரூ.2,500 செலுத்தவும், வேட்பாளா்களை 10 போ் முன்மொழியவும், 10 போ் ஆதரிக்கவும் வேண்டும்.

இது கடந்த 1997-ஆம் ஆண்டு 11-ஆவது குடியரசுத் தலைவா் தோ்தலுக்கு முன்பாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி வேட்பாளா்கள் டெபாசிட் தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும். அவா்களை தலா 50 போ் முன்மொழியவும் ஆதரிக்கவும் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.