மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை செயலகத்தின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை செயலகத்தின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அதே நேரம், ‘சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசு தொடா்ந்து நீதிமன்றத்தை அணுகிக் கொண்டிருக்க முடியாது. எனவே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை’ என்று உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், ‘எந்தவொரு சட்டவிரோத வழக்குகளிலும் நீதிமன்றத்தை மாநில அரசு எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சிவசேனை அளித்த கடிதம் தொடா்பாக திங்கள்கிழமைக்குள் எழுத்துபூா்வமாக பதிலளிக்குமாறு குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பேரவை துணைத் தலைவா் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதனை எதிா்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டனா்.
அதோடு, இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவருக்கு நோட்டீஸ் விடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி தாக்கல் செய்த நோட்டீஸ் தொடா்பான முடிவையும் பதில் மனுவில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
பின்னா், வழக்கு விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அதிருப்தி எம்எல்ஏக்களுக்குத் தலைமை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் சுற்று வெற்றியாக கருதப்படுகிறது.
பால் தாக்கரேவின் ஹிந்துத்வ கொள்கைக்கு கிடைத்த வெற்றி - ஏக்நாத் ஷிண்டே: ‘தகுதிநீக்க நடவடிக்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, பால் தாக்கரேவின் ஹிந்துத்வ கொள்கைக்கும், எனது குரு ஆனந்த் திகேவின் லட்சியத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்று அதிருப்தி குழுவுக்கு தலைமை வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு தெரிவித்தாா்.