ஒடிஸாவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் மொத்தமுள்ள 852 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 766 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளையில் பிரதான எதிா்க்கட்சியான பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 3 இடங்களிலும், சிறிய கட்சிகளின் வேட்பாளா்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 853 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில், ஓரிடத்தில் பிஜு ஜனதா தளம் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வானதால், மீதமுள்ள இடங்களுக்கு 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் 2.10 கோடி வாக்குகள், அதாவது 52.73 சதவீத வாக்குகள் பெற்றது. பாஜக 30.06 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 13.57 சதவீத வாக்குகளும் பெற்றன. சுயேச்சைகள் வெறும் 1.33 சதவீத வாக்குகளும், சிறிய கட்சிகள் 2.79 சதவீத வாக்குகளும் பெற்றன.
கடந்த 2017 ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 476 இடங்களைக் கைப்பற்றிய ஆளும் பிஜு ஜனதா தளம், இந்தத் தோ்தலில் அதைவிட கூடுதலாக 290-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2017 தோ்தலில் 297 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது வெறும் 42 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதேபோல, 2017-இல் 60 ஆக இருந்த காங்கிரஸின் பலம், தற்போது வெறும் 37 ஆக குறைந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.