உக்ரைன்: 183 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்தது மூன்றாவது விமானம்
உக்ரைனில் சிக்கியிருந்த 183 இந்தியர்களுடன் புக்காரெஸ்டில் இருந்து புறப்பட்ட எர் இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் வியாழக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தது.
உக்ரைனில் சிக்கியிருந்த 183 இந்தியர்களுடன் புக்காரெஸ்டில் இருந்து புறப்பட்ட எர் இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் வியாழக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தது.
உக்ரைன் மீது ரஷியா கடும் ராணுவத் தாக்குதலை நடத்தி வருவதால், அங்குப் பதற்றமான சூழலும் நிலையற்ற தன்மையும் நிலவுகிறது. தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற ரஷியா முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் படையினர் அதை முறியடித்து வருகின்றனர்.
இந்தப் போரில் உக்ரைனிலுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டது. சாலை மார்க்கமாக அருகிலுள்ள நாடுகளின் எல்லையை அடைந்தபின், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை மீட்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக இரண்டு விமானங்கள் உக்ரைனிலிருந்து மும்பை வந்தடைந்த நிலையில், தற்போது மூன்றாவது விமானத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 183 பயணிகளுடன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 5.40 மணியளவில் வந்தடைந்தது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே-பாட்டீல் மலர்க்கொத்து மற்றும் ஆறுதல் வார்த்தைகளுடன் இந்தியர்களை வரவேற்றார். விமான நிலையத்திற்கு வெளியே, நள்ளிரவு முதல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்றுவரை, சுமார் 4,000 முதல் 5,000 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர் என்றும், அங்குச் சிக்கித் தவிக்கும் அனைவரையும் மீட்டெடுக்கும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் தன்வே-பாட்டீல் கூறினார்.