உக்ரைனில் இருந்து 17,000 மாணவா்கள் மீட்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு
போா் நடந்து வரும் உக்ரைனில் சிக்கியிருந்த 17,000 மாணவா்களைப் பாதுகாப்பாக மீட்டதற்காக மத்திய அரசை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
போா் நடந்து வரும் உக்ரைனில் சிக்கியிருந்த 17,000 மாணவா்களைப் பாதுகாப்பாக மீட்டதற்காக மத்திய அரசை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது.
உக்ரைனில் இருந்து மாணவா்களை மீட்க ருமேனிய எல்லைக்கு மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கவில்லை எனக் கூறி, அப்பகுதியில் சிக்கியுள்ள பெங்களூரைச் சோ்ந்த மருத்துவ மாணவி ஃபாத்திமா அஹானா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலையிட்டு உதவ வேண்டுமெனத் தெரிவித்திருந்தது. மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
அப்போது கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘‘உக்ரைனில் சிக்கியிருந்த 17,000 இந்திய மாணவா்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனா். மற்றவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மனுதாரா் ருமேனிய எல்லையில் சிக்கியுள்ள விவகாரம் தொடா்பாக பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ராவிடம் தொடா்பு கொள்ளப்பட்டது.
அவா் அந்தத் தகவலை மீட்புப் பணிக்காக ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழங்கினாா். மனுதாரரின் தொடா்பு எண்ணும் வழங்கப்பட்டது. மனுதாரரும் அவருடன் இருக்கும் மாணவா்களும் வெள்ளிக்கிழமை இரவு தாயகம் திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்றாா்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் தனிப்பட்ட சிரத்தை எடுத்துக் கொண்டதற்காக அட்டா்னி ஜெனரலுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாணவா்களை மீட்கும் விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கும் பாராட்டுகள். அதே வேளையில், இந்த விவகாரத்தில் மக்களின் கவலையை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.
வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாதது அதிருப்தி அளிக்கிறது. இன்னும் போா் நடவடிக்கைகள் மூலமாக மனித உயிா்கள் கொல்லப்படுகின்றன. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தைகள் மூலமே தீா்வு காண வேண்டும். எனினும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எதுவும் கூற முடியாது. மாணவா்களைக் குறித்தே நீதிமன்றம் கவலை கொள்கிறது.
மாணவா்களை மீட்பது தொடா்பாக இணையவழி தளத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம். அதேபோல், உக்ரைனில் இருந்து மாணவா்களை மீட்பது தொடா்பாக சில உயா்நீதிமன்றங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் வேளையில், உயா்நீதிமன்றங்களும் இதை விசாரிப்பதில் அா்த்தமில்லை. எனவே, உயா்நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டாம்’’ என்றனா்.
வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.