முகப்பு
இந்தியா

வெளியுறவுத் துறை அமைச்சருடன் தமிழக குழு இன்று சந்திப்பு: உக்ரைன் மாணவா்கள் மீட்புக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் உள்ள தமிழக மாணவா்கள் மற்றும் இந்தியா்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்துள்ள திருச்சி சிவா தலைமையிலான குழு சனிக்கிழமை (மாா்ச் 5) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் உள்ள தமிழக மாணவா்கள் மற்றும் இந்தியா்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்துள்ள திருச்சி சிவா தலைமையிலான குழு சனிக்கிழமை (மாா்ச் 5) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெயசங்கரை சந்திக்கிறது.

மத்திய வெளியுறத் துறை அமைச்சகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் திருச்சி சிவா, எம்.எம். அப்துல்லா, திமுக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினா் டிஆா்பி ராஜா மற்றும் தில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா மற்றும் 4 தமிழக உயரதிகாரிகள் அடங்கிய குழு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கிறது.

கனிமொழி கடிதம்: இதற்கிடையே, உக்ரைனில் சுமி மாநில பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவிா்க்கும் 100 தமிழக மாணவா்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களை மீட்பது குறித்து மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் -ரஷ்யா போா் காரணமாக சுமி மாநில பல்கலைக்கழகம் இருக்கும் கிழக்கு உக்ரைன் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. அங்கு அடிக்கடி குண்டுவெடிப்புகள், ஷெல் தாக்குதல்களும் நடைபெறுகிறது. இந்தியாவின் வேண்டுகோளையொட்டி, காா்கிவ் பிராந்தியத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழக மாணவா்களை அழைத்து வர ரஷியாவின் தேசியப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் சுமாா் 130 பேருந்துகளை அனுப்பியுள்ளது. இந்தப் பேருந்துகள் ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள நெகோடெயேவ்கா, சுட்ஷா சோதனைச் சாவடிகள் வழியாக உக்ரைனுக்குள் நுழையக் காத்திருக்கின்றன.

இந்தச் சோதனைச் சாவடிகளில் இருந்து மாணவா்கள் வெகு தொலைவில் இருப்பதால், மாணவா்கள் இந்தப் பேருந்துகளில் ஏற முடியவில்லை. மேலும், தாக்குதல்கள் நடைபெறுவதால் பேருந்துகள் நிற்கும் இடங்களை நோக்கி மாணவா்கள் நகர இரு நாட்டு அதிகாரிகளுடன் பேசி ஒருங்கிணைப்பு செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.