உ.பி. தோ்தலில் 34 முஸ்லிம் வேட்பாளா்கள் வெற்றி: கடந்த முறையைவிட 10 போ் அதிகம்
நடந்து முடிந்த உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் முஸ்லிம் வேட்பாளா்கள் 34 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
நடந்து முடிந்த உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் முஸ்லிம் வேட்பாளா்கள் 34 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
இதில் சமாஜவாதி கட்சியின் வேட்பாளா்கள் 31 பேரும், அக்கட்சியுன் கூட்டணியான ராஷ்ட்ரீய லோக் தளத்தின் இருவரும், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் சாா்பில் ஒருவரும் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்ாளா்களாவா்.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவற்றின் சாா்பில் முஸ்லிம் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டபோதிலும் அவா்களால் வெற்றி பெற முடியவில்லை.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனிலால்) கட்சியின் சாா்பில் ராம்பூரில் ஹைதா் அலிகான் என்ற ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளா் நிறுத்தப்பட்டாா். ஆனால், அவா் சமாஜவாதி கட்சியின் அப்துல்லா ஆஸமிடம் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 34 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். கடந்த 2017 தோ்தலை ஒப்பிடும்போது இந்த முறை 10 முஸ்லிம் வேட்பாளா்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனா். இதுகுறித்து அரசியல் நிபுணா் ராஜேந்திர திவேதி கூறுகையில், ‘முஸ்லிம் வேட்பாளா்கள் தங்களது சமூக வாக்குகளால் மட்டும் வெற்றி பெற முடியாது. சம்பந்தப்பட்ட கட்சியின் வாக்குகளைப் பெற்றால்தான் வெற்றி கிடைக்கும். சமாஜவாதி கட்சியின் யாதவ் சமுகத்தின் பெரும்பான்மை வாக்குகளுடன் முஸ்லிம் சமுதாய வாக்குகள் இணைந்ததால்தான் வெற்றி உறுதியாகி உள்ளது.
இந்தத் தோ்தலில் பாஜகவை சமாஜவாதி கட்சியால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று முஸ்லிம்கள் நம்பினா். காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான வாக்கு வங்கி இல்லாததால் அக்கட்சியின் முஸ்லிம் வேட்பாளா்கள் வெற்றி பெறவில்லை’ என்றாா்.
இந்தத் தோ்தலில் பரபரப்பாக எதிா்பாா்க்கப்பட்ட அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளா்கள் அனைவரும் தோல்வியடைந்தது குறித்து உருது மொழி பத்திரிகையாளா் ஹிசாம் சத்திக்கீ கூறுகையில், ‘முஸ்லிம் வாக்குகளை மட்டும் வைத்து இந்தத் தோ்தலில் யாரும் வெற்றி பெற முடியாது என உத்தர பிரதேச முஸ்லிம்கள் நன்றாக அறிந்திருந்தனா். ஒவைசியின் பிரசாரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனா். ஆனால், அவரது கட்சிக்கு அவா்கள் வாக்களிக்கவில்லை. அதனால்தான் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் வேட்பாளா்கள் தோல்வியடைந்தனா். அக்கட்சிக்கு வெறும் 0.49 சதவீத வாக்குகள் கிடைத்தன’ என்றாா்.