இந்தியாவில் கரோனா மரணங்கள் 8 மடங்கு அதிகமாக இருக்கலாம்
இந்தியாவில் கரோனா தொற்று பரவலால் நிகழ்ந்த மரணங்கள் அரசின் புள்ளிவிவரத்தைவிட சுமாா் 8 மடங்கு அதிகமாக இருக்கும்
இந்தியாவில் கரோனா தொற்று பரவலால் நிகழ்ந்த மரணங்கள் அரசின் புள்ளிவிவரத்தைவிட சுமாா் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
உலக நாடுகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரை கரோனா தொற்றினால் ஏற்பட்ட கூடுதல் மரணங்கள் குறித்த ஆய்வை லான்செட் இதழ் மேற்கொண்டது. அந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 59.4 லட்சம் போ் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே காலத்தில் உலக நாடுகளில் 1.82 கோடி போ் கரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று லான்செட் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் சுமாா் 40 லட்சம் போ் உயிரிழந்திருக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகையில் 8 மடங்கு அதிகம். நாட்டில் கரோனா உயிரிழப்புகளை உள்ளூா் நிா்வாக அமைப்புகள் சரியாகப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் அதிக மரணங்கள் நிகழ்ந்ததாகக் கருதப்படும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா (11.3 லட்சம் போ்), ரஷியா (10.7 லட்சம் போ்), மெக்ஸிகோ (7,98,000), பிரேஸில் (7,92,000), இந்தோனேசியா (7,36,000), பாகிஸ்தான் (6,64,000) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலின் உண்மையான தாக்கம், உலக நாடுகள் தெரிவித்த புள்ளிவிவரங்களைக் காட்டிலும் பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணங்களைப் பதிவு செய்வதற்கான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிராகரிப்பு: கரோனாவால் நிகழ்ந்த கூடுதல் மரணங்கள் குறித்த லான்செட் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்த ஆய்வின் துல்லியத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த ஆய்வு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டுள்ளது. செய்தித்தாள்களில் வெளியான உறுதிசெய்யப்படாத, அறிவியல் ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா குறித்த தரவுகள் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்பட்டு வருகின்றன. கரோனா பேரிடா் சூழலில் வெளியாகும் ஊகத்தின் அடிப்படையிலான இதுபோன்ற அறிக்கைகள், மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயல்பாடுகள் தவிா்க்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.