முகப்பு
இந்தியா

பஞ்சாப் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா் பகவந்த் மான்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
பகவந்த் மான்
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினாா்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம், மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ஆம் ஆத்மியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பகவந்த் மான் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில், சண்டீகரில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் பகவந்த் மான் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பகவந்த் மான் கூறியதாவது:

ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தோம். அதை அவா் ஏற்றுக்கொண்டாா். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கும் உரிமை கோரினோம். அதற்கும் அவா் ஒப்புக்கொண்டாா்.

பதவியேற்பு விழா, சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் சொந்த ஊரான நவன்சாகா் மாவட்டத்தில் உள்ள கத்கா் கலன் கிராமத்தில், வரும் 16-ஆம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு நடைபெறும்.

அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பஞ்சாப் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். அன்றைய தினம், பஞ்சாபியா் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

பஞ்சாபின் வளா்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆம் ஆத்மி அமைச்சரவை நன்றாகச் செயல்படும். அதில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு பகவந்த் மான் அழைப்பு விடுத்துள்ளாா்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பஞ்சாபின் அமிருதசரஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிப் பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்கு வரும் அரவிந்த் கேஜரிவாலும், பகவந்த் மானும் பொற்கோயில், துா்க்கியானா கோயில், ஸ்ரீராம் தீரத் மந்திா் ஆகியவற்றில் வழிபாடு செய்யவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.