பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அம்பேத்கரிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக ஊடகங்கள், தங்கள் முதலாளிகளின் வழிகாட்டுதலின் கீழ் சாதிவெறி, வெறுப்பு மனப்பான்மையைக் கடைப்பிடித்து செய்த பணி யாருக்கும் தெரியாமல் இல்லை.
எனவே, எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சுதீந்திர பதவுரியா, தரம்வீர் சௌத்ரி, டாக்டர்.எம்.எச்.கான், பைசான் கான் மற்றும் சீமா குஷ்வாஹா ஆகியோர் இனி தொலைக்காட்சி விவாதங்கள் போன்றவற்றில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தோல்விக்கு ஊடகங்களும் சமாஜவாதி கட்சியுமே காரணம் என மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் 273 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமாஜவாதி கூட்டணி 121 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி நிலையைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.