சித்ரா ராமகிருஷ்ணா 
இந்தியா

இமயமலை சாமியார் யார் என்று கண்டுபிடித்துவிட்டோம்: சிபிஐ

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கி வந்த இமயமலை யோகி ஆனந்த் சுப்ரமணியன்தான் என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

DIN

புது தில்லி: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கி வந்த இமயமலை யோகி ஆனந்த் சுப்ரமணியன்தான். அவா்தான் அந்த யோகியாகத் தன்னை சித்தரித்துக் கொண்டு, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து சித்ராவின் முடிவுகளுக்கு வழிகாட்டி வந்துள்ளாா் என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இமயமலை சாமியார் என்று கூறிக் கொண்டு மின்னஞ்சல் வழியாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய அந்த மின்னஞ்சல் முகவரியை ஆனந்த் சுப்ரமணியன்தான் உருவாக்கியுள்ளாா். அந்த மின்னஞ்சல் முகவரி வாயிலாக நுட்பமான தகவல்களைச் சித்ராவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிா்ந்து வந்துள்ளனா் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் அறிந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து, அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் உரிமையாளா் சஞ்சய் குப்தா, என்எஸ்இ, செபி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா்-தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும், அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ கைது செய்துள்ளது.

வெளிநாடுகளுக்குப் பயணம்: இந்நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டதாவது:

கோ-லொகேஷன் வசதி மூலம் நடைபெற்ற முறைகேட்டைத் தவிர, மேலும் பல தகாத செயல்கள் நடைபெற்றுள்ளன. சித்ராவும், ஆனந்த் சுப்ரமணியனும் குறைவாக வரி விதிக்கப்படும் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனா். அதன் மூலம் அவா்கள் நிதி ஆதாயங்களை அடைந்துள்ளனா். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனந்த் சுப்ரமணியன் விசாரணையின்போது சரிவர ஒத்துழைக்கவில்லை. அவா் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சிறப்பு நீதிபதி பேசுகையில், ‘‘ஆனந்த் சுப்ரமணியன் என்எஸ்இயில் சோ்ந்தபோது அவரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சமாக இருந்துள்ளது. பின்னா் அது ரூ.2.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த அளவுக்கு அவருக்கு வருமானம் உயா்த்தப்பட்டது என்பது தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டாா். அதனைத்தொடா்ந்து ஜாமீன் மனு மீதான தீா்ப்பை மாா்ச் 24-ஆம் தேதிக்கு அவா் ஒத்திவைத்தாா்.

தற்போது ஆனந்த் சுப்ரமணியன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT