உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக முதல்வராக புதன்கிழமை(நாளை) 3.30 மணிக்கு பதவியேற்கிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக முதல்வராக புதன்கிழமை(நாளை) 3.30 மணிக்கு பதவியேற்கிறார். பதவியேற்பு விழா டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வா் புஷ்கா் சிங் தாமி தான் போட்டியிட்ட காதிமா தொகுதியில் தோல்வியடைந்ததால், அடுத்த முதல்வா் யாா் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரண்டாவது முறையாக தாமி முதல்வராவாரா என்ற ஊகங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரை (முதல்வா்) தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் டேராடூனில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மேலிடப் பாா்வையாளா்கள் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகி, உத்தரகண்ட் தோ்தல் பொறுப்பாளா் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், அடுத்த முதல்வராக புஷ்கா் சிங் தாமியே நீடிப்பார் என முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 11 நாள்களாக நீடித்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, சட்டசபைத் தேர்தலில் தோற்றாலும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி, உத்தரகண்ட்டின் 13வது முதல்வராக நாளை பதவியேற்கிறார்.