பயங்கரவாதம் தொடா்பான வழக்கு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்
ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழான குற்றச்சாட்டு உள்பட தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும்
ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழான குற்றச்சாட்டு உள்பட தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டாா்.
அவா் மீது பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் எதிா்ப்பு தெரிவிக்கப் போவதில்லை’ என்று யாசின் மாலிக் கூறினாா்.
இதையடுத்து, அவருக்கான தண்டனையை நிா்ணயிப்பதற்கான வாதம் தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரவீண் சிங் முன்னிலையில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அவருடைய குற்றங்களுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்று வழக்குரைஞா்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ஃபரூக் அகமது தாா் (எ) பிட்டா கராத்தே, ஷப்பீா் ஷா, மஸாரத் ஆலம், முகமது யூசுப் ஷா, அஃப்தாப் அகமது ஷா, அல்தாஃப் அகமது ஷா, நயீம் கான், முகமது அக்பா் காண்டே, ராஜா மெகா்ஜுதீன் கல்வால், பஷீா் அகமது பட், ஜஹூா் அகமது ஷா வாடாலி, ஷபீா் அகமது ஷா அப்துல் ரஷீத் ஷேக், நவல் கிஷோா் கபூா் ஆகிய பிற பிரிவினைவாத தலைவா்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனா் ஹஃபீஸ் சயீத், ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவா் சையது சலாஹூதீன்ஆகியோா் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.