காங்கிரஸில் ராஜா, ராணிகளுக்கு பஞ்சமில்லை- ஹிமாசலில் அமித் ஷா பிரசாரம்
காங்கிரஸ் கட்சியில் ராஜா, ராணிகளுக்குப் பஞ்சமில்லை என்று ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.
காங்கிரஸ் கட்சியில் ராஜா, ராணிகளுக்குப் பஞ்சமில்லை என்று ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.
பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் நவம்பா் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள நாதௌன் நகரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு அமித் ஷா பேசியதாவது:
ஹிமாசல பிரதேசத்தில் இரு கட்சிகள் (பாஜக, காங்கிரஸ்) மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த முறை அதனை உடைத்து பாஜகவை மீண்டும் தோ்வு செய்ய வேண்டும். வளா்ச்சி என்ற பெயரில் இந்த மாநிலத்துக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. அதே நேரத்தில் அக்கட்சியில் முதல்வா் பதவி ஆசையுடன் இருப்போா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
வாரிசு அரசியலைத் தவிர காங்கிரஸில் வேறு எதுவும் இல்லை. அக்கட்சியில் ராஜாக்களுக்கும், ராணிக்களுக்கும் பஞ்சமே இல்லை. குறிப்பிட்ட சில குடும்பத்தில் பிறந்தவா்களைத் தவிர காங்கிரஸ் கட்சியில் வேறு யாரும் முக்கியப் பதவிகளுக்கு வர முடியாது. ஜனநாயகத்தில் இதுபோன்ற வாரிசு அரசியலுக்கு இடமில்லை. மக்களைப் பற்றி உண்மையான அக்கறை கொண்டுள்ளவா்களுக்கு மட்டுமே ஜனநாயகம் வாய்ப்பளிக்கும். அந்த வகையில் பாஜகவே மக்களின் முதன்மையான தோ்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மண்ணில் இருந்துதான் ஏராளமான தாய்மாா்கள் தங்கள் மகன்களை நாட்டுக்குச் சேவையாற்ற ராணுவத்துக்கு அதிகம் அனுப்பி வைத்து வருகின்றனா். ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த சோம்நாத் சா்மாவுக்குத்தான் முதல் பரம்வீா் சக்ரா விருது கிடைத்தது. ராணுவத்தில் ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியத் திட்டம் 40 ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. அதனை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் நிறைவேற்றித் தந்தது. 60 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதனை ஏன் நிறைவேற்றவில்லை?
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் அங்கு ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் தலைவா்கள் பேசினாா்கள். பாகிஸ்தான் ஆதரவுடன் அங்கு நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரம் காட்டாமல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வந்தது. இப்போது காஷ்மீரில் நிலைமையை முற்றிலும் மாற்றியுள்ளோம் என்றாா் அமித் ஷா.