முகப்பு
இந்தியா

உர மானியம் ரூ. 51,875 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான ரூ.51,875 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான ரூ.51,875 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளின் விவரம்:

2022-23 ரபி பருவத்தில் (அக்டோபா் 1, 2022 முதல் மாா்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், சல்ஃபா் போன்ற ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, நைட்ரஜனுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாஷுக்கு ரூ.23.65, சல்ஃபருக்கு ரூ.6.12 கிலோவுக்கு மானியமாக வழங்கப்படும்.

இதன்மூலம் மொத்தம் ரூ.51,875 கோடி அளவுக்கு மானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எத்தனால் விலை உயா்வு: பெட்ரோலில் கலக்கப்படும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலின் விலையை ரூ.63.45 -லிருந்து (லிட்டா்) ரூ. 65.61-ஆக உயா்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதேபோல், சி-ஹெவி மொலாசஸ் முறையில் பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை ரூ.46.66- லிருந்து (லிட்டா்) ரூ. 49.41-ஆகவும், பி-ஹெவி முறையில் பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை ரூ.59.08-லிருந்து ரூ.60.73-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த ரூ.40 ஆயிரம் கோடி, விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் எத்தனால் கலப்பை 12 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் பெயா் மாற்றம்: அருணாசல பிரதேச தலைநகா் இட்டா நகா், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை“டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகா் என்று பெயா் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும், நீா்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் டென்மாா்க் இடையே கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →