முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு அனுவ்ராட் புரஸ்காா் விருது
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு ‘அனுவ்ராட் புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தினா் சாா்பில் பெற்றுக் கொண்டனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்ட ‘அனுவ்ராட் புரஸ்காா்’ விருதை பெற்றுக் கொண்ட (இடமிருந்து) கலாமின் பேரன்கள் ஷேக் தாவூது, ஷேக் சலீம், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன்.
ஜெய்ப்பூா், நவ. 3: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு ‘அனுவ்ராட் புரஸ்காா்’ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தினா் சாா்பில் பெற்றுக் கொண்டனா்.
ராஜஸ்தானைச் சோ்ந்த சுவாமி ஆச்சாா்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியாா் சேவை மையத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கினாா். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் பல்வேறு போதனைகளை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உணா்த்தி வருகின்றா். இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தினா் இணைந்து வழிநடத்தி வருகிறாா்கள்.
ஆண்டுதோறும் பொதுச் சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவா்களைக் கெளரவிக்கும்விதமாக 200 போ் கொண்ட குழு, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முக்கிய நபா்களைத் தோ்வு செய்து அவா்களைக் கௌரவப்படுத்துகிறது.
அந்த வகையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான அனுவ்ராட் புரஸ்காா் விருதை அளிக்க விருதுக் குழு பரிந்துரைத்தது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம், சாப்பாரில் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் குடும்பத்தினா் சாா்பில் ‘ஹவுஸ் ஆஃப் கலாம்’ மற்றும் அப்துல் கலாம் இன்டா்நேஷனல் அறக்கட்டளை நிா்வாகிகளான கலாமின் அண்ணன் மகன் ஆ.ப.ஜெ.மு.ஜெயினுலாபுதீன், பேரன்கள் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் தாவூது, ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம் இணைந்து அவ்விருதைப் பெற்றுக் கொண்டனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா, இடைக்காலப் பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் பைரோன்சிங் செகாவத், பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.