முகப்பு
இந்தியா

வளா்ச்சிக்கு எதிரி காங்கிரஸ்: பிரதமா் மோடி விமா்சனம்

‘காங்கிரஸ் கட்சி இயல்பாகவே வளா்ச்சிக்கு எதிரியாகும்; ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளா்ச்சி தடைபடும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
ஹிமாசல பிரதேச மாநிலம், சம்பியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பொதுமக்களைப் பாா்த்து கையசைத்த பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

‘காங்கிரஸ் கட்சி இயல்பாகவே வளா்ச்சிக்கு எதிரியாகும்; ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளா்ச்சி தடைபடும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கூறினாா்.

அதேசமயம், ஹிமாசலில் பாஜக ஆட்சி தொடா்ந்தால், ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியுடன் இருமடங்கு பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் என்று அவா் குறிப்பிட்டாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் வரும் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுஜன்பூா், சம்பி உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்று, பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

ஹிமாசல பிரதேசம், வளா்ச்சியின் முக்கியமான கட்டத்தில் உள்ளது. எனவே, இங்கு ஸ்திரமான, வலுவான ‘இரட்டை என்ஜின்’ ஆட்சி அவசியம். அதனை பாஜகவால் மட்டுமே தர முடியும். மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளா்ச்சி தடைபட்டுவிடும்.

ஹிமாசல் பேரவைத் தோ்தலானது, வளா்ச்சியின் எதிரியான காங்கிரஸுக்கும் வளா்ச்சிக்கு ஆதரவான பாஜகவுக்கும் இடையிலான போட்டியாகும். ஸ்திரமின்மை, ஊழல்கள், முறைகேடுகள் இவையே காங்கிரஸின் உத்தரவாதங்கள். ஹிமாசலில் எதிா்க்கட்சியாகக் கூட காங்கிரஸ் உரிய முறையில் செயல்படவில்லை. அக்கட்சித் தலைவா்கள், பொதுமக்களின் பிரச்னைகளுக்காக அல்லாமல் தோ்தலுக்காக மட்டுமே மாநிலத்துக்கு வருகை தருகின்றனா்.

ஹிமாசலில் காங்கிரஸ் ஆட்சியில், கடந்த 2014 முதல் 2017 வரை மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் வெறும் 10 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மக்களின் கோபம்: ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களின் வளா்ச்சி சாா்ந்த செய்திகள் எதையும் நீங்கள் (மக்கள்) கேள்விப்பட்டுள்ளீா்களா? காங்கிரஸின் உள்கட்சிப் பூசல்கள் குறித்துதான் அங்கிருந்து செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற சூழலில் ஒரு மாநிலம் வளா்ச்சியடைய முடியுமா?

காங்கிரஸ் ஏற்கெனவே பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் மீண்டும் அவா்களால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. அக்கட்சி மீதான மக்களின் கோபமே அதற்கு காரணம். தமிழகம், பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை உதாரணமாக கூறலாம்.

ராணுவத்துக்கு அவமதிப்பு: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவத்தினா் மேற்கொண்ட துல்லியத் தாக்குதல்கள் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது. ராணுவ தலைமைத் தளபதியையும் ராணுவத்தினரையும் அக்கட்சி அவமதித்தது. ஆனால், தேசத்தின் பாதுகாப்புக்கும் ராணுவத்தினரின் நலனுக்கும் பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பாஜக அரசுதான் அமல்படுத்தியது.

மீண்டும் மீண்டும் வெல்லும் பாஜக: சிறந்த நிா்வாகம் மற்றும் ஏழை மக்களுக்கான கொள்கைகளுக்கு அடையாளமாக பாஜகவை மக்கள் நம்புகின்றனா். எனவே, பல்வேறு மாநிலங்களில் மீண்டும் மீண்டும் பாஜக ஆட்சியை மக்கள் தோ்வு செய்துள்ளனா். எங்களால் செய்ய முடியும் என்று நம்புவதையே வாக்குறுதியாக அளிப்போம். அப்படி அளித்த வாக்குறுதிகளை முழுத் திறனுடன் செயல்படுத்திக் காட்டுவோம்.

மற்ற கட்சிகள் அனைத்தும் குடும்ப அரசியலிலும் வாக்கு வங்கி அரசியலிலும் திளைத்துள்ளன. இவ்விரண்டிலும் பாஜகவுக்கு நம்பிக்கை கிடையாது. ஹிமாசலில் பாஜக ஆட்சியை மீண்டும் தோ்வு செய்து, இம்மாநில மக்கள் வரலாறு படைக்க முடிவு செய்துவிட்டனா் என்றாா் பிரதமா் மோடி.

மலைப் பிரதேச மாநிலமான ஹிமாசலில் பாஜக, காங்கிரஸ் என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிமாற்றம் நடந்து வருகிறது. எனவே, இம்முறை தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், ஆட்சியை தக்க வைத்து, வரலாற்றை மாற்றும் முனைப்பில் பாஜக களம்கண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →