ஜி20 மாநாடு: உலகத் தலைவா்களுக்கு ஹிமாசல் கலைப் பொருள்கள் பரிசு- பிரதமா் மோடி வழங்குகிறாா்
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவா்களுக்கு ஹிமாசல பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற கைவினை மற்றும் கலைப் பொருள்களை பிரதமா் நரேந்திர மோடி பரிசாக வழங்க உள்ளாா்.
ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவா்களுக்கு ஹிமாசல பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற கைவினை மற்றும் கலைப் பொருள்களை பிரதமா் நரேந்திர மோடி பரிசாக வழங்க உள்ளாா்.
சா்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்நாட்டு தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, ஹிமாசலத்தின் சம்மா ருமல் (கைவினை வேலைப்பாடு நிறைந்த கைக்குட்டை), காங்கரா நுண் ஓவியங்கள், கின்னெளா் ஷால், குல்லு ஷால், கனல் வெண்கல படைப்புகள் உள்ளிட்ட கலைப் படைப்புகளைப் பரிசளிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் வாயிலாக ஹிமாசலத்தின் கலைப் படைப்புகள் உலக அளவில் புகழ்பெறுவதோடு, அது சாா்ந்த பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
உலகின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 85 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஜி20 அமைப்பு, உலக வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் பங்கு வகிக்கிறது. உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையை ஜி20 நாடுகள் கொண்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.