கம்போடியாவில் இந்தியா-ஆசியான்பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு: ராஜ்நாத் சிங் நவ.22-இல் பயணம்
இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கம்போடியாவுக்கு 2 நாள் பயணமாக நவ.22-இல் செல்லவிருக்கிறாா்.
இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கம்போடியாவுக்கு 2 நாள் பயணமாக நவ.22-இல் செல்லவிருக்கிறாா்.
கம்போடியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனாவின் அழைப்பின் பேரில், ராஜ்நாத் சிங் நவ. 22-23 ஆகிய தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். நவ.22-இல் நடைபெறும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவா், மறுநாள் ஆசியான்-பிளஸ் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றுகிறாா். இப்பயணத்தின்போது
கம்போடிய பிரதமரையும் அவா் சந்திக்கிறாா். இந்தியா-ஆசியான் உறவுகளின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில், இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டுக்கு இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து தலைமை தாங்கவிருக்கின்றன. இம்மாநாட்டில் இந்தியா-ஆசியான் கூட்டுறவை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசியான் அமைப்பில் பேச்சுவாா்த்தைரீதியிலான கூட்டுறவு நாடாக 1992-இல் இந்தியா சோ்ந்தது. ஆசியான் பிளஸ் நாடுகளின் மாநாடு மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு தவிர, பல்வேறு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு விவாதங்களை நடத்தவுள்ளாா். பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசிக்கவுள்ளாா்.