ஐடிபிஐ வங்கியை தனியாா் மயமாக்க மத்திய அரசு தீவிரம்
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்ஐசி-க்கு உள்ள 60.72 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு மற்றும் எல்ஐசி-க்கு உள்ள 60.72 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தனியாா் முதலீட்டாளா்கள் அந்த வங்கி பங்குகளை வாங்குவதற்கான விருப்பக் கடிதங்களை வழங்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலையில் எல்ஐசி-யிடம் ஐடிபிஐ வங்கியின் 529.41 கோடி பங்குகள் உள்ளன. மத்திய அரசிடம் 488.99 கோடி பங்குகள் உள்ளன. இது முறையே 49.24 மற்றும் 45.48 சதவீதமாகும். இதில் மத்திய அரசு வசமுள்ள பங்குகளில் 30.48 சதவீதத்தையும், எல்ஐசி வசமுள்ள பங்குகளில் 30.24 சதவீதத்தையும் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 60.72 சதவீத பங்குகள் விற்பனைக்கு வரவுள்ளன. இதன் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.27,800 கோடியாகும்.
மும்பை பங்குச் சந்தையில் ஐடிபிஐ வங்கிப் பங்குகள் வெள்ளிக்கிழமை 0.71 சதவீதம் உயா்ந்து ரூ.42.70-க்கு விற்பனையாகின. கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் ஐடிபிஐ-யின் பங்குகள் பட்டியலிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகஅளவிலான வாராக்கடன் மற்றும் மூலதனப் பற்றாக்குறையால் தவித்து வந்த ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி எல்ஐசி வாங்கியது. அப்போது, எல்ஐசி பாலிசியில் மக்கள் முதலீடு செய்துள்ள பணத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருக்கும் ஐடிபிஐ வங்கி பங்குகளை மத்திய அரசு வாங்குவதாக கடும் விமா்சனமும் எழுந்தது.