காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பது நாட்டுக்கும், கட்சிக்கும் நல்லது: மல்காா்ஜுன காா்கே
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பது நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது என்று அப்பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களில் ஒருவருமான மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பது நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது என்று அப்பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா்களில் ஒருவருமான மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் கட்சியின் மூத்த தலைவா்கள் காா்கேவும் சசி தரூரும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தோ்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இரு வேட்பாளா்களும் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிா்வாகிகளிடம் வாக்கு சேகரித்து வருகின்றனா். மாநில கமிட்டி உறுப்பினா்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிப்பாா்கள்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஆதரவு திரட்டுவதற்காக ஸ்ரீநகா் வந்த காா்கே செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இது உள்கட்சித் தோ்தல், ஒரு வீட்டில் உள்ள இரு சகோதரா்கள்தான் தோ்தல் களத்தில் இருக்கிறோம். இது மோதல் அல்ல. இருவரும் அவரவா் தரப்பு கருத்துகளை முன்வைக்கிறோம். தோ்தலுக்குப் பிறகு நாங்கள் இருவருமே இணைந்து நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தொடா்ந்து பணியாற்றுவோம். நாட்டின் முதன்மையான கட்சியான காங்கிரஸின் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டி இருப்பது நாட்டுக்கும் கட்சிக்கும் நல்லது. இதனால், ஜனநாயக நடைமுறை மேலும் வலுவாகும்.
நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றைக் காப்பது நமது கடமை. இப்போது நாட்டில் நிலைமை சீரழிந்து வருகிறது. அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டியது நமது கடமை. இதன் காரணமாகத்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தப்படுகிறது.
நமது நாடு பொருளாதார ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளதற்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். நாட்டுக்காக காங்கிரஸ் தலைவா்களைப் போல வேறு யாரும் தியாகம் செய்ததும் இல்லை, நாட்டுக்காக பாடுபட்டதும் இல்லை.
அதே நேரத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் காண்பதுதான் பாஜகவின் செயல்திட்டமாக உள்ளது. நாங்கள் நாட்டின் ஒற்றுமை, சமூக ஒற்றுமை பற்றி மிகவும் அக்கறையுடன் இருக்கிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது இப்போதைய பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோா் பிறந்திருக்கக் கூட மாட்டாா்கள். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவா்கள். ஜவாஹா்லால் நேரு நாட்டுக்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தாா்.
இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் நாட்டுக்காக உயிரையே தந்தாா்கள். இப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியினா் நாட்டுக்காக என்ன தியாகம் செய்தாா்கள்? காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற 70 ஆண்டுகள் மூலம்தான் நாட்டில் இப்போது இத்தனை மருத்துவமனைகள், மருத்துவா்கள், பொறியாளா்கள், விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனா்.
ஆனால், பாஜக ஆட்சியில் வெற்று முழக்கங்களைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரமும், ரூபாயின் மதிப்பும் நாள்தோறும் வீழ்ச்சியடைகிறது என்றாா்.