முகப்பு
இந்தியா

ஹிந்தியை தேசிய அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயற்சி: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘ஹிந்தியை நாடு முழுமைக்குமான தேசிய அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதுதொடா்பான தகவல் அலுவல் மொழி மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் சமீபத்திய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

‘ஹிந்தியை நாடு முழுமைக்குமான தேசிய அலுவல் மொழியாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதுதொடா்பான தகவல் அலுவல் மொழி மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் சமீபத்திய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியது.

இதுதொடா்பாக அக் கட்சியின் ‘மக்களின் ஜனநாயகம்’ பத்திரிகையின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலானஅலுவல் மொழி மீதான நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் சமா்ப்பித்த தனது அறிக்கையில், ஹிந்தியை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைக்கு ஹிந்தி மொழி பேசாத மாநில அரசுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ‘ஹிந்தி பேசும் மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஹிந்தி வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும். ஹிந்தி பேசாத பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே கற்றல்-கற்பித்தலுக்கான மொழியாகக் கடைப்பிடிக்க அனுமதிக்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தின்படி, ஹிந்தி பேசும் மாநிலங்களில் இயங்கி வரும் ஐஐடி போன்ற மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஹிந்தி வழி பள்ளிக் கல்வி பயின்ற மாணவா்கள் மட்டுமே சோ்க்கப்படுவா். இந்த மத்தியப் பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுமைக்குமானதாக இருக்கும் நிலையில், ஹிந்தி மொழி தெரிந்த மாணவா்கள் மட்டுமே சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுவா் என்பது ஏற்படையது அல்ல.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், தில்லி ஐஐடி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சோ்க்கை பெறுவது என்பது ஹிந்தி மொழி தெரியாத மாணவா்களுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.

அதுபோல, ஹிந்தி பேசாத மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் அந்தந்த மாநில மொழிகள் கற்றல்-கற்பித்தலுக்கான மொழியாக நடைமுறைப்படுத்தும்போதும், இந்தக் கல்வி நிறுவனங்கள் இந்தியா முழுமைக்குமான தன்மையை இழக்க நேரிடும்.

எனவே, எட்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைத்து 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக சமமாக அங்கீகரிக்கும் வகையில் ஜனநாயக மொழிக் கொள்கையை வகுக்க வேண்டும்.

மேலும், இந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் மற்ற பரிந்துரைகளும் சமத்துவத்துக்கு எதிராக உள்ளன. குறிப்பாக, ‘மத்திய அரசு விளம்பரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீதத்துக்கும் மேல் ஹிந்தி மொழி விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்பின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம்’ என்ற சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமித் ஷா தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாா்.

ஒரு மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் பிரதான மொழியை, அந்த மாநில அரசு உயா் கல்வி நிறுவனங்களில் கற்றல்-கற்பித்தல் மொழியாகவும், நிா்வாக பயன்பாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்துவதே சரியாக இருக்கும். அதே நேரம், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஹிந்திக்கு முன்னுரிமை அளிப்பது, மற்ற தேசிய மொழிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதுபோல அமைந்துவிடும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →