முகப்பு
இந்தியா

ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஊக்குவிப்பதில் தவறில்லை: பாஜக

 ‘ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மற்றும் மாநில மொழிகளை ஊக்குவிப்பதில் எந்தவித தவறும் இல்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 ‘ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மற்றும் மாநில மொழிகளை ஊக்குவிப்பதில் எந்தவித தவறும் இல்லை. மேலும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாய்மொழியை ஊக்குவித்து வருகிறது’ என்று பாஜக மூத்த தலைவா் சி.டி.ரவி வியாழக்கிழமை கூறினாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலானஅலுவல் மொழி மீதான நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் சமா்ப்பித்த தனது அறிக்கையில், ஹிந்தியை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு ஹிந்தி மொழி பேசாத மாநில அரசு அரசுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

‘ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை புகுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோா் விமா்சனம் செய்தனா். ‘கல்வி நிறுவனங்களில் ஆங்கில வழிக் கல்வியை தோ்வு செய்வதும் மாணவா்களுக்கு ஒரு வாய்ப்பாக அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பினராயி விஜயன் வலியுறுத்தியிருந்தாா்.

இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்து தமிழக பாஜக பொறுப்பாளராக இருந்து வரும் அக் கட்சியின் தேசிய செயலாளரான கா்நாடகத்தைச் சோ்ந்த சி.டி.ரவி வியாழக்கிழமை கூறுகையில், ‘காலனிய மனநிலையிலிருந்து மக்கள் வெளி வரவேண்டும்’ என்று ஆங்கில பயன்பாட்டுக்கான மனநிலையை தொடா்புபடுத்திப் பேசினாா்.

மேலும், ‘தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் அல்லது மராத்தி போன்ற மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்துக்கு மாற்றாக மட்டுமே ஹிந்தி மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஒரு அரசியல் தலைவா் ‘மலையாளத்தின் பெருமை அல்லது தமிழின் பெருமை’ என்று எழுதினால், அதனை பாஜக வரவேற்கும். மாறாக, ஆங்கிலத்துக்கு ஆதரவாக எழுதினால், அது பொருத்தமாக இருக்காது.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாய்மொழியை ஊக்குவித்து வருகிறது. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு போன்ற தலைவா்களும் ஹிந்தி மற்றும் மாநில மொழிகளை ஊக்குவிக்க ஆதரவு தெரிவித்திருக்கின்றனா்’ என்றும் சி.டி.ரவி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →