இந்தியா

பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிக்க வேண்டும்: சர்வதேச நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

DIN

பயங்கரவாதிகள், குற்றவாளிகள், ஊழல்வாதிகள் ஆகியோருக்கான பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க சர்வதேச நாடுகள் வேகமாகப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 சர்வதேச காவல் துறை அமைப்பான இன்டர்போலின் 90-ஆவது பொதுச்சபை கூட்டத்தை அவர் தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் நினைவு தபால்தலையையும் ரூ.100 நாணயத்தையும் அவர் வெளியிட்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நாசர் அல்ரைசி, பொதுச் செயலாளர் ஜர்கன் ஸ்டாக் ஆகியோர் வரவேற்றனர். பாகிஸ்தான் உள்பட 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போல் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் மோடி பேசியது:
 நாடு கடந்த பயங்கரவாதத்தை இந்தியா பல தசாப்தங்களாக எதிர்த்துப் போராடி வந்துள்ளது. பயங்கரவாதம் குறித்து உலகம் விழிப்புணர்வு பெறுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே பாதுகாப்பின் விலை என்ன என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்தனர்.
 பாதுகாப்பான உலகை உருவாக்குவது என்பது உலக சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். நன்மைக்கான சக்திகள் இணக்கமாகச் செயல்பட்டால் குற்றங்களுக்கான சக்திகள் செயல்பட முடியாது.
 ஊழல்வாதிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான புகலிடங்கள் இருக்கக் கூடாது.
 பயங்கரவாதிகள், ஊழல், போதைமருந்துக் கடத்தல், ஆள்கடத்தல் போன்ற உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதிகள், குற்றவாளிகள், ஊழல்வாதிகள் ஆகியோருக்கான பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க சர்வதேச நாடுகள் வேகமாகப் பணியாற்ற வேண்டும். அச்சுறுத்தல் உலக அளவிலானதாக இருக்கும்போது அதற்கான பதிலடிகள் உள்ளூர் அளவிலானதாக இருக்க முடியாது. இந்த அச்சுறுத்தல்களைத் தோற்கடிக்க உலகம் ஒன்றிணைவதற்கான நேரம் இது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT