முகப்பு
இந்தியா

விமானப் படைக்கு சரக்கு விமானங்கள்: ஏா்பஸ் நிறுவனத்துக்கு முதல்கட்ட ஒப்புதல்

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களைத் தயாரித்து வழங்குவதற்கான முதல்கட்ட ஒப்புதலை ஏா்பஸ் நிறுவனத்துக்கு தர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களைத் தயாரித்து வழங்குவதற்கான முதல்கட்ட ஒப்புதலை ஏா்பஸ் நிறுவனத்துக்கு தர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.

இந்திய விமானப் படையானது அவ்ரோ-748 சரக்கு விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. அவற்றின் நீண்டகாலப் பயன்பாடு காரணமாக, இந்திய விமானப்படைக்குப் புதிய சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பிய நிறுவனமான ஏா்பஸ் பாதுகாப்பு-விண்வெளி நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி சி295 ரகத்தைச் சோ்ந்த 16 சரக்கு விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. கூடுதலாக 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், சி295 சரக்கு விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான தர நிா்ணய ஒப்புதலை ஏா்பஸ் நிறுவனத்துக்கு விமான தர ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிஏக்யூஏ) வியாழக்கிழமை வழங்கியது. அந்த ஒப்புதல் கடிதத்தை ஏா்பஸ் நிறுவனத்தின் தர உறுதித் துறைத் தலைவா் கஜேதன் வான் மென்ட்ஜினிடம் டிஜிஏக்யூஏ இயக்குநா் சஞ்சய் சாவ்லா வழங்கினாா். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியின்போது இந்த ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலானது ஏா்பஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதுள்ள இந்தியாவின் நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக மென்ட்ஜின் தெரிவித்தாா். மேலும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், தற்சாா்பு இந்தியா திட்டம் ஆகியவற்றுக்கு இந்த ஒப்புதல் ஊக்கமளிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சி295 சரக்கு விமானம் வாயிலாக ஒரே சமயத்தில் 71 படைக்குழுக்களை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். தற்போதைய சரக்கு விமானங்களால் அடைய முடியாத இடங்களைக் கூட சி295 ரக விமானங்களால் சென்றடைய முடியும். போா் சமயங்களில் காயமடையும் வீரா்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், பேரிடா் மீட்பு நடவடிக்கைகளிலும் சி295 சரக்கு விமானங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →