முகப்பு
இந்தியா

வெறுப்புணா்வு பேச்சுகள் மீது தாமாக நடவடிக்கை: தில்லி, உ.பி., உத்தரகண்ட் அரசுகளுக்கு உத்தரவு

வெறுப்புணா்வு பேச்சுகள் தொடா்பாக தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மதத்தை பொருள்படுத்தாமல் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக குற்ற வழக்குப்பதிவு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

வெறுப்புணா்வு பேச்சுகள் தொடா்பாக தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மதத்தை பொருள்படுத்தாமல் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக குற்ற வழக்குப்பதிவு செய்யவும் தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘மதச்சாா்பற்ற தேசத்தையே அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது’ என்று கூறிய உச்சநீதிமன்றம், வெறுப்புணா்வு பேச்சுகள் மிகத் தீவிரமான பிரச்னை என குறிப்பிட்டது.

இதுதொடா்பாக ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சுகள், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது; ஆளும் கட்சியினரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவுடன் இச்செயல்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் சுதந்திரமான, நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளவும், தவறிழைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

அத்துடன், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தில்லியில் அண்மைக் காலங்களில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுகள் குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: இந்திய அரசமைப்புச் சட்டமானது, மதச்சாா்பற்ற தேசத்தையும் குடிமக்களிடையே சகோதரத்துவத்தையும் தனிநபா்களின் கண்ணியத்தை உறுதி செய்வதையும் வலியுறுத்துகிறது. தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, முகப்புரையில் இடம்பெறுள்ள வழிகாட்டும் கொள்கைகளில் ஒன்றாகும்.

வெவ்வேறு மதத்தைச் சோ்ந்தவா்கள் நல்லிணக்கத்துடன் வாழ முடியாத பட்சத்தில், சகோதரத்துவம் எங்கே நிலவும்? வெறுப்புணா்வு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு சட்டப் பிரிவுகள் இருப்பதாக மனுதாரா் சுட்டிக் காட்டியுள்ளாா். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளை காக்க வேண்டிய தேவை உள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் அரசமைப்புச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் கடமை இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது.

வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசுபவா்கள் மீது மதத்தை பொருள்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் மதச்சாா்பற்ற கட்டமைப்பை காக்க முடியும்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தில்லியில் வெறுப்புணா்வு பேச்சுகள் தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மூன்று தரப்பினரும் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுகள் தொடா்பாக புகாருக்கு காத்திருக்காமல் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →