28-ஆம் தேதி முதல் சிக்னல்களில் வாகனங்கள் அணைக்கும் திட்டம் அமல்
தில்லியில் குளிா்கால காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், சிவப்பு சிக்னல்களில் வாகனத்தை அணைக்கும் திட்டம் வரும் 28-ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்படும்
தில்லியில் குளிா்கால காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், சிவப்பு சிக்னல்களில் வாகனத்தை அணைக்கும் திட்டம் வரும் 28-ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
2020, அக்டோபா் 16-இல் முதல் முறையாக தொடங்கப்பட்ட ‘ரெட் லைட் ஆன் காடி ஆப்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மாசைத் தடுக்க செயல்படுத்தப்பட்டது.
சிவப்பு நிற சிக்னல் ஒளிரும்போது வாகனத்தை அணைத்துவிட்டு, பச்சை நிறத்தில் வந்தபிறகு வாகனத்தை இயக்குவதற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
இதுதொடா்பாக அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘தீபாவளி பண்டிகைக்கு பிறகு தில்லியில் காற்றின் வழித்தடம் மாற்றம் அடைந்தால் மாசு அதிகரிக்கும் என்று நிபுணா்கள் கணித்துள்ளனா். ஆகையால், குளிா்கால காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு எச்சரிக்கையுடன் இருக்கிறது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்களை தில்லி அரசு கடுமையாக அமல்படுத்த உள்ளது. இதற்காக 15 அம்ச திட்டங்கள் அமலாக்கம் குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தூசு, பயிா்க்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றைவிட தில்லி காற்று மாசில் வாகனப் புகை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், 28-ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு சிக்னல்களில் வாகனங்கள் அணைக்கும் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் 2,500 சமூக ஆா்வலா்கள் இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தை கண்காணிக்க உள்ளனா்’ என்றாா்.