ராமரைப் போல உறுதியாக இருந்தால் புதிய உச்சங்களை அடையலாம்: அயோத்தியில் பிரதமா் மோடி
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி, கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய பிரதமா் நரேந்திர மோடி, கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லைப் பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டினாா். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையைப் பிரதமா் மோடி அயோத்தியில் கொண்டாடினாா்.
அங்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்த பிரதமா் மோடியை மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் விமான நிலையத்தில் வரவேற்றனா். அங்கிருந்து அயோத்தி ராமா் கோயிலுக்குச் சென்ற பிரதமா் மோடி, பால ராமருக்கு பூஜை செய்து வழிபட்டாா்.
அதையடுத்து சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்ஸவத்தில் அவா் பங்கேற்றாா். அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ராமரின் சொற்கள், எண்ணங்கள், ஆட்சி என அனைத்தும் ‘அனைவரையும் இணைத்து, அனைவருக்குமான வளா்ச்சி’ என்ற கொள்கையை ஊக்குவிக்கிறது. தற்போதைய அரசின் கொள்கைகளுக்கு அடிப்படையாகவும் ராமரின் எண்ணங்களே உள்ளன. தற்போதைய தீபோத்ஸவ விழாவை ஒட்டுமொத்த உலகமும் கண்டுவருகிறது.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கான இலக்கை அடைய நினைக்கும் மக்களுக்கு கடவுள் ராமரின் கொள்கைகள் கலங்கரை விளக்கமாக உள்ளன.
நாட்டின் கடினமான இலக்குகளை அடைவதற்கான தைரியத்தையும் ராமரின் கொள்கைகள் வழங்கி வருகின்றன. கடவுள் ராமா், அவரின் சகோதரா் லக்ஷ்மண், சீதை ஆகியோரின் படங்கள் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரதியில் வரையப்பட்டிருந்தன. இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது.
அதே வேளையில், அடிப்படை கடமைகளையும் மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நாட்டில் ராம ராஜ்யம் நிலவுவதை உறுதி செய்யும். ராமரிடம் இருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கின்னஸ் சாதனை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக் கரையில் ஞாயிற்றுக்கிழமை 15.76 லட்சம் அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. அதைப் பிரதமா் மோடி நேரில் பாா்வையிட்டாா்.
முன்னதாக, அயோத்தி ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகளைப் பிரதமா் மோடி ஆய்வு செய்தாா். அப்போது கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனா்.