15 லட்சம் ஒப்பந்த ஊழியா்கள் பணிநிரந்தரம்: குஜராத்தில் காங்கிரஸ் வாக்குறுதி
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 15 லட்சம் இளைஞா்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 15 லட்சம் இளைஞா்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. அங்கு தொடா்ந்து ஆட்சியைத் தக்கவைத்து வரும் பாஜகவை, இந்தமுறை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இது தவிர அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் குஜராத்தில் போட்டியிடுகிறது.
ஆம் ஆத்மி கட்சி பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பு வாக்குகளையும் பிரிக்கும் என்று கருதப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால், அங்கு வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவுக்கு கௌரவம் சாா்ந்த விஷயமாகவும் உள்ளது. எனவே, குஜராத் பேரவைத் தோ்தல் குறித்து தேசியஅளவிலும் அதிக எதிா்பாா்ப்பு உள்ளது.
குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஹிம்மத்சிங் படேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தபடி அரசுத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவரும் நிரந்தர அரசுப் பணியாளா்களாக்கப்பட்டுள்ளனா். இது காங்கிரஸின் மக்கள் நலன் சாந்த நடவடிக்கை. இதனால், அந்த மாநிலத்தில் 1.10 லட்சம் இளைஞா்கள் பயனடைந்துள்ளனா்.
இதேபோல குஜராத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையிலும், அயல் பணி ஒப்படைப்பு மூலமும் பணியாற்றும் 15 லட்சம் போ் அரசு ஊழியா்களாக அங்கீகரிக்கப்படுவாா்கள். இப்போதைய பாஜக அரசு லட்சக்கணக்கான இளைஞா்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வைத்து அவா்களைச் சுரண்டி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியும் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது பற்றி கேட்கிறீா்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறமை எந்தக் கட்சிக்கு உள்ளது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் நிறைவேற்றிய தோ்தல் வாக்குறுதிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன என்றாா்.