சித்ரகாங் புயல் வங்கதேசத்தின் டிங்கோனா தீவு மற்றும் சந்த்விப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது புயலாக ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரமடைந்தது.
அந்தப் புயல் வங்கதேசத்தின் வடமேற்கில் இருந்து வடகிழக்கு திசையில் செல்லும் நிலையில், அந்நாட்டின் டிங்கோனா தீவு மற்றும் சந்த்விப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
இந்தப் புயல் காரணமாக, ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த மழைப் பெய்யக் கூடும்.
"மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் மற்றும் வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள சுந்தர்பான்கள் முக்கியமாக பாதிக்கக் கூடும்" என்று இந்திய வானிலை மையத்தின் துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சிப் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.
வங்கக் கடலில் 2018 ஆம் ஆண்டு முதல் அக்டோபரில் திட்லி புயல் உருவானது. அதன்பிறகு 2022 அக்டோபரில் இருவான முதல் புயல் இதுவாகும். இதற்கு தாய்லாந்து பரிந்துரைத்தபடி 'சித்ரகாங்' என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 131 ஆண்டுகளில், வங்கக் கடலில் அக்டோபர் மாதத்தில் 61 புயல்கள் உருவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.