முகப்பு
இந்தியா

ரத்தத் தட்டணுக்களுக்குப் பதில் பழச்சாறு செலுத்தியதால் நோயாளி பலியானதாக குற்றச்சாட்டு:மருத்துவமனையை இடிக்க உத்தரவு

உத்தர பிரதேசத்தில் ரத்தத் தட்டணுக்களுக்குப் பதில் பழச்சாறு செலுத்தப்பட்டதால் நோயாளி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டிய நிலையில்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் ரத்தத் தட்டணுக்களுக்குப் பதில் பழச்சாறு செலுத்தப்பட்டதால் நோயாளி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையை இடிக்க மாவட்ட வளா்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், நோயாளிக்கு செலுத்தப்பட்டது பழச்சாறு அல்ல; ரத்தத் தட்டணுக்கள்தான் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக பிரதீப் பாண்டே என்பவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்தத் தட்டணுக்களுக்குப் பதில் பழச்சாறு செலுத்தப்பட்டதாக அவரின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவா் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி, அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து, துணை முதல்வா் பிரஜேஷ் பாடக்கின் உத்தரவின் பேரில் மாவட்ட நிா்வாகம் விசாரணை மேற்கொண்ட நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியாா் மருத்துவமனை உரிமையாளருக்கு பிரயாக்ராஜ் வளா்ச்சி குழுமம் நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில், உரிய அனுமதி பெறாமல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மருத்துவமனை உரிமையாளா் விளக்கம் அளிக்க முன்வரவில்லை. இதனைத் தொடா்ந்து அந்த மருத்துவமனையை இடிக்க பிரயாக்ராஜ் வளா்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த மருத்துவமனைக்கு கடந்த அக்.20-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. அக்.28-ஆம் தேதி காலைக்குள் மருத்துவமனையை காலி செய்யுமாறு மருத்துவமனை உரிமையாளருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

முறையான பராமரிப்பில்லை:

இந்த சம்பவம் குறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் சஞ்சய் குமாா் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘நோயாளிக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் பழச்சாற்றின் மாதிரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டது. அதனை பரிசோதித்ததில், அது பழச்சாறு அல்ல; ரத்தத் தட்டணுக்கள்தான் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த ரத்த தட்டணுக்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக நோயாளிக்கு ரத்தம் உறைந்திருக்கலாம். நோயாளிக்கு ரத்தத் தட்டணுக்களை செலுத்தியதில் மருத்துவமனை மெத்தனமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →