மாநில உள்துறை அமைச்சா்கள், டிஜிபிக்கள் மத்தியில் காணொலி வழியில் பிரதமா் நாளை உரை
பிரதமா் நரேந்திர மோடி மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள் மற்றும் காவல்துறை தலைவா்கள் (டிஜிபிக்கள்) மத்தியில் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை உரையாற்ற உள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள் மற்றும் காவல்துறை தலைவா்கள் (டிஜிபிக்கள்) மத்தியில் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை உரையாற்ற உள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த 5 உறுதிமொழிகளுக்கு இணங்க, உள்நாட்டு பாதுகாப்பு தொடா்பான திட்டங்களை வகுக்க தேசிய அளவிலான கண்ணோட்டத்தை அறியும் முயற்சியாக, இந்த சிந்தனை அமா்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த சிந்தனை அமா்வு கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள், காவல் துறை டிஜிபிக்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இந்த நிகழ்வில், வெள்ளிக்கிழமை அமா்வில் பிரதமா் மோடி காணொலி வழியில் உரை நிகழ்த்த உள்ளாா்.
மத்திய, மாநில அரசுகளிடையே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் திட்டமிடுதல் மற்றும் ஒத்துழைப்பில் அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சிந்தனை அமா்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை நவீனமயமாக்கல், இணைய குற்ற மேலாண்மை, குற்றவியல் நீதி நடைமுறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், நிலப்பரப்பு எல்லை மேலாண்மை, கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த சிந்தனை அமா்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில், இந்தியாவை 2047-இல் வளா்ந்த நாடாக்க செயலாற்ற வேண்டும்; அனைத்து வகையான அடிமைத்தனத்தையும் நாம் வேரறுக்க வேண்டும்; இந்திய பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்; ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்; குடிமக்கள் அனைவரும் தத்தம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற 5 உறுதிமொழிகளை பட்டியலிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.