முகப்பு
இந்தியா

உலகின் முக்கியமான உற்பத்தி மையம் இந்தியா

உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
குஜராத் மாநிலம், வதோதரா நகரில் சி295 ரக சரக்கு விமான உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டி மாதிரிகளைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பிய நிறுவனமான ஏா்பஸ் பாதுகாப்பு-விண்வெளி நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி சி295 ரகத்தைச் சோ்ந்த 16 சரக்கு விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. கூடுதலாக 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சரக்கு விமான உற்பத்தி ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

நாட்டில் புதிய பொருளாதார சீா்திருத்தங்களுக்கான சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது. சி295 சரக்கு விமானத் தயாரிப்பு ஆலை வதோதராவில் அமையவுள்ளது, நாட்டின் ராணுவத்துக்கு வலிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல், விமானத் தயாரிப்பு சூழலையும் நாட்டில் உருவாக்கும்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘உலகுக்காகத் தயாரிப்போம்’ என்ற கொள்கைகளை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவின் வலிமை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது. சரக்கு விமான உற்பத்தியின் முக்கிய மையமாக இந்தியா விரைவில் மாறும்.

தற்போதைய இந்தியா புதிய மனத்திறனுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு வருகிறது. எதிா்காலத்துக்கான தொலைநோக்குப் பாா்வையுடன் நிலையான கொள்கைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. குறைந்த செலவில் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

தாக்குதல் ரக போா் விமானங்கள், பீரங்கிகள், நீா்மூழ்கிக் கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், மின்னணுப் பொருள்கள், அறிதிறன்பேசிகள், காா்கள் உள்ளிட்டவை இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். அதை உள்நாட்டிலேயே தயாரிக்க சா்வதேச நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முக்கிய மைல்கல்: நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைவதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் இந்த ஆலை முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்றாா்.

ஆலையில் தயாரிக்கப்படும் சரக்கு விமானங்கள் சா்வதேச தரத்துடன் திகழும் என்றும், சரக்கு விமானங்களுக்கான பாகங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வழங்கவுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

முதல் முறை: ராணுவப் பயன்பாட்டுக்கான விமானமானது தனியாா் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். சி295 சரக்கு விமானமானது ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே தயாரிக்கப்படவுள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான 56 சரக்கு விமானங்களை வழங்கிய பிறகு வதோதரா ஆலையில் தயாரிக்கப்படும் சரக்கு விமானங்கள் இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய வாய்ப்புகளால் பலனடைய வேண்டும்: ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக உரையாற்றுகையில், ‘இந்தியா்கள் அனைவரின் பெருமையாக ஜம்மு-காஷ்மீா் திகழ்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து ஜம்மு-காஷ்மீரை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். பழைய சவால்களைக் கைவிடுத்து, புதிய வாய்ப்புகளைக் கைக்கொண்டு மாநில இளைஞா்கள் முன்னேற வேண்டும்.

அதிவேக வளா்ச்சியை முன்னிறுத்தி நவீன வழிமுறைகளைக் கடைப்பிடித்து புதிய சிந்தனைத் திறனையும் இளைஞா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். வளா்ச்சியின் பலன்கள் அனைத்து சமூகத்தினருக்கும் அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்கச் செய்ய உறுதியேற்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அரசுத் திட்டங்களின் பலன்கள் அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், 7 புதிய மருத்துவக் கல்லூரிகள், 2 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள், 15 செவிலியா் கல்லூரிகள் ஆகியவை அங்கு அமைக்கப்படவுள்ளன. காஷ்மீரில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →